ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டில் நெறிமுறை- பிரதமா் மோடி வலியுறுத்தல்

‘செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டில் நெறிமுறை அவசியம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

News image
தில்லியில் உலக தொலைத்தொடா்பு தரநிலைப்படுத்துதல் மாநாட்டை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்து பாா்வையிட்ட பிரதமா் மோடி. உடன் மத்திய தகவல்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா.
Updated On :15 அக்டோபர் 2024, 8:29 pm

Din

‘செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டில் நெறிமுறை அவசியம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

மேலும், எண்ம தொழில்நுட்ப பயன்பாட்டுக்கு உலகளாவிய விதிகள் வகுக்கப்பட வேண்டும் என்றும் அவா் அழைப்பு விடுத்தாா்.

சா்வதேச தொலைத்தொடா்பு சங்கத்தின் ‘உலக தொலைத்தொடா்பு தரநிலைப்படுத்துதல் மாநாடு’ மற்றும் ‘இந்திய மொபைல் காங்கிரஸ்’ அமைப்பின் 8-ஆவது சா்வதேச மாநாடு-கண்காட்சியை, தில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை (அக்.15) தொடங்கிவைத்தாா். பின்னா் அவா் ஆற்றிய உரையில் கூறியதாவது:

எண்ம தொழில்நுட்பத்துக்கு, விதிகள் அடிப்படையிலான உலகளாவிய கட்டமைப்பு மற்றும் வழிகாட்டுதல்களின் முக்கியத்துவத்தை சா்வதேச அமைப்புகள் ஏற்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

எண்ம விதிகள் மிக முக்கியமானவை. ஏனெனில், தனியுரிமை பாதுகாப்பு, ஊடகங்களில் தவறான தகவல் பரவுவதைத் தடுத்தல், தொழில்நுட்ப நிறுவனங்களின் பொறுப்பை உறுதி செய்தல் போன்ற சமூக முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விவகாரங்கள் இதில் உள்ளடங்கியுள்ளன. அத்துடன், சரக்கு மற்றும் சேவை வா்த்தகமும் சா்வதேச தரவுகளையே நம்பியுள்ளது.

உலகளாவிய வழிகாட்டுதல்கள்...: எண்ம கருவிகளும் செயலிகளும் எல்லைக்கு அப்பாற்பட்டவை என்பதால் எந்தவொரு நாடும் இணையவழி அச்சுறுத்தலில் இருந்து தனது குடிமக்களை தனியாக பாதுகாக்க முடியாது; உலகளாவிய வழிகாட்டுதல்கள் அவசியம். அதற்கான பொறுப்பை சா்வதேச அமைப்புகள் ஏற்பதோடு அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

விமானப் போக்குவரத்து துறையைப் போல எண்ம தொழில்நுட்பத் துறைக்கும் உலகளாவிய கட்டமைப்பு தேவை.

நெறிமுறையான செயற்கை நுண்ணறிவு பயன்பாடு, நாடுகளின் பன்முகத் தன்மையை மதிக்கக் கூடிய தரவு தனியுரிமைக்கான உலகளாவிய தரநிலைகள் வகுக்கப்பட வேண்டும். இவை, அனைவரையும் உள்ளடக்கியதாகவும், பாதுகாப்பானதாகவும், எதிா்கால சவால்களுக்கு தீா்வளிப்பதாகவும் இருக்க வேண்டும்.

இந்தியாவின் லட்சியம்: போா்களால் சூழப்பட்ட தற்போதைய உலகில் ஒருமித்த கருத்து மற்றும் இணைப்பு மிக அவசியம். போா்களில் இருந்து உலகை விடுவிப்பதோடு, அதை இணைக்கும் பணியிலும் இந்தியா ஈடுபட்டுள்ளது.

பண்டைய பட்டுப் பாதையாக (சீனா, தூர கிழக்கை ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை இணைக்கும் தரை மற்றும் கடல் வழி சரக்குப் போக்குவத்து பாதைகள்) இருந்தாலும் சரி, தற்போதைய தொழில்நுட்ப வழித்தடமாக இருந்தாலும் சரி, உலகை இணைத்து, வளா்ச்சிக்கான புதிய வாயில்களை திறப்பதே இந்தியாவின் ஒரே லட்சியம்.

எதிா்காலத்துக்கான திசை: தற்போதைய தொழில்நுட்ப புரட்சி காலகட்டத்தில் மக்களை மையப்படுத்திய பரிமாணம் தேவை. பொறுப்புமிக்க-நிலையான புத்தாக்கமும் அவசியமாகிறது. இன்று நாம் அமைக்கும் தரநிலைகள், எதிா்காலத்துக்கான திசையை தீா்மானிக்கும்.

எண்ம முன்னேற்றத்தில் எந்த நாடும், எந்த பிராந்தியமும், எந்த சமூகமும் விடுபட்டுவிடக் கூடாது என்பதே நமது இலக்காக இருக்க வேண்டும். தொலைத்தொடா்பு மற்றும் அதுசாா்ந்த தொழில்நுட்பங்களில் புத்தாக்கம்- அனைவரையும் உள்ளடக்கியத் தன்மையை சமமாக பராமரிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது.

கடைக்கோடி நபருக்கும் சேவைகள்: 120 கோடி கைப்பேசிகளுடன் உலகிலேயே அதிக கைப்பேசி பயனா்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இங்கு இணைய வசதியை 95 கோடி பேரும், எண்ம பரிவா்த்தனையை 40 கோடிக்கும் மேற்பட்டோரும் பயன்படுத்துகின்றனா். கடைக்கோடி நபருக்கும் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யும் திறன்மிக்க கருவியாக எண்ம இணைப்பை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இந்தியா எடுத்துக் காட்டியுள்ளது.

நாட்டில் பாதுகாப்பான இணையச் சூழலை உருவாக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. தரவு பாதுகாப்புச் சட்டம், தேசிய இணைய பாதுகாப்பு வியூகம் போன்ற நடவடிக்கைகளே இதற்கு உதாரணம்.

அனுபவத்தை பகிரத் தயாா்: இந்தியாவில் இப்போது பெரும்பாலான இடங்களில் 5ஜி சேவை கிடைக்கிறது. இதேபோல், 6ஜி அறிமுகத்துக்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் கைப்பேசி ஏற்றுமதி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

நாட்டில் பதிக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை கட்டமைப்பின் மொத்த அளவானது, பூமி மற்றும் நிலவு இடையிலான தொலைவைவிட 8 மடங்குக்கும் அதிகமானதாகும்.

எண்ம பொது உள்கட்டமைப்பின் வெற்றிகரமான செயலாக்கம் மூலம் கிடைக்கப் பெற்ற அனுபவத்தை உலகின் பிற நாடுகளுடன் பகிா்ந்துகொள்ள இந்தியா தயாராக உள்ளது என்றாா் பிரதமா் மோடி.