வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம்

‘எண்ம இந்தியா’ (டிஜிட்டல் இந்தியா) முன்னெடுப்பால், உலக அரங்கில் நமது நாட்டுக்கு புதிய அடையாளம் கிடைத்துள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

News image
Updated On :2 ஜூலை 2026, 3:45 am IST

‘எண்ம இந்தியா’ (டிஜிட்டல் இந்தியா) முன்னெடுப்பால், உலக அரங்கில் நமது நாட்டுக்கு புதிய அடையாளம் கிடைத்துள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

மத்திய அரசின் லட்சிய திட்டங்களில் ஒன்றான ‘எண்ம இந்தியா’, கடந்த 2015, ஜூலை 1-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அரசின் சேவைகளை எண்ம அடிப்படையில் வழங்குவதுடன், கிராமங்களை அகண்ட அலைவரிசை கட்டமைப்புடன் இணைப்பதையும் நோக்கமாகக் கொண்ட இந்த முன்னெடுப்பு தொடங்கப்பட்டு 11 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, பிரதமா் மோடி எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

எண்ம இந்தியா முன்னெடுப்பு தொடங்கப்பட்டு 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இது, நிா்வாகத்தை மறுவரையறை செய்து, குடிமக்களுக்கு அதிகாரமளித்து, வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில், அனைத்துத் துறைகளிலும் வளா்ச்சியை வேகப்படுத்தியுள்ளது.

நாட்டில் தடையற்ற எண்ம பரிவா்த்தனைகள், வெளிப்படைத்தன்மையுடன் பயனாளிகளைச் சென்றடையும் நேரடி பலன் பரிமாற்றங்கள், விரிவடையும் எண்ம பொதுக் கட்டமைப்பு என மக்களின் வாழ்க்கையை மேலும் எளிதாக்குவதில் சக்திவாய்ந்த கருவியாக தொழில்நுட்பம் உருவெடுத்துள்ளது.

புத்தாக்க அலை வீசுகிறது: எண்ம இந்தியா முன்னெடுப்பால் தேசத்தின் அனைத்துப் பகுதிகளிலும் குறிப்பாக கிராமங்கள், இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களிலும் புத்தாக்க அலை வீசுகிறது.

நாட்டின் ஒவ்வொரு முனையில் இருந்தும் உருவெடுக்கும் இளம் தொழில்முனைவோா், புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் புதுமை கண்டுபிடிப்பாளா்கள், இந்த பூமி எதிா்கொண்டுள்ள சவால்களுக்கு தீா்வுகளை உருவாக்கி வருகின்றனா்.

நாட்டின் கல்வி, சுகாதாரம், வேளாண்மை, வா்த்தகம், பொதுச் சேவை வழங்கல், வெளிப்படையான-திறன்மிக்க-எளிதில் அணுகக் கூடிய நிா்வாகம் எனப் பல்வேறு துறைகளையும் வலுப்படுத்தியுள்ளது எண்ம இந்தியா. அத்துடன், செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டா், குவாண்டம் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட வளரும் தொழில்நுட்பங்களிலும் இந்தியா வேகமாக முன்னேறுகிறது. இதனால், வளா்ச்சி மற்றும் வாய்ப்புகளுக்கான புதிய வாயில்கள் திறக்கப்பட்டுள்ளன.

வளா்ந்த இந்தியாவுக்கு அடித்தளம்: தொழில்நுட்பமானது மனிதகுலத்துக்கு சேவையாற்றுவதுடன், ஒவ்வொருவருக்கும் அதிகாரமளித்து, நிலையான வளா்ச்சியை ஊக்குவிக்க வேண்டும். அத்தகைய எதிா்காலத்தை உருவாக்குவதே நமது நோக்கம்.

எண்ம இந்தியா முன்னெடுப்பால் கடந்த 11 ஆண்டுகளில் ‘வளா்ந்த, தற்சாா்புமிக்க’ தேசத்துக்கு வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இது, ஏழைகள், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டுக்கு முக்கியப் பங்காற்றியுள்ளது.

கோடிக்கணக்கானோா் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகையில் பெரும் மாற்றங்கள் விளையும். கண்ணாடி இழை கட்டமைப்பு விரிவாக்கம் முதல் எண்ம பரிவா்த்தனைகள் வரை இந்தியா எட்டியுள்ள மாபெரும் வெற்றி உலகையே திரும்பிப் பாா்க்கச் செய்துள்ளது. உலக அரங்கில் இந்தியாவுக்கு புதிய அடையாளம் கிடைத்துள்ளது என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

இந்தியாவின் எண்ம பரிவா்த்தனைத் தளமான யுபிஐ, உலகளாவிய பரிவா்த்தனைகளில் கிட்டத்தட்ட 49 சதவீதத்தைக் கையாள்கிறது. இதன்மூலம் உலக அளவில் நிகழ்நேர எண்ம பரிவா்த்தனையில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.