மகாராஷ்டிரம்: பாஜகவுக்கு ஆதரவாக களமிறங்கியது ஆர்எஸ்எஸ்

தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் அந்த மாநிலத்தில் பாஜகவை வெற்றி பெறச் செய்ய ஆர்எஸ்எஸ் அமைப்பு குழுக்களை அமைத்து பணியாற்றி வருகிறது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Published on
Updated on
1 min read

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் அந்த மாநிலத்தில் பாஜகவை வெற்றி பெறச் செய்ய ஆர்எஸ்எஸ் அமைப்பு குழுக்களை அமைத்து பணியாற்றி வருகிறது.

அண்மையில் நடைபெற்ற ஹரியாணா சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மக்களை நேரடியாகச் சந்தித்து பிரசாரம் செய்தனர். இந்த பிரசாரம் பாஜகவின் வெற்றிக்குக் கைகொடுத்தது.

இந்நிலையில், மகாராஷ்டிர பேரவைத் தேர்தல் நவம்பர் 20-ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் பாஜகவுக்கு ஆதரவாக மக்கள் அலையை உருவாக்கும் பணியில் ஆர்எஸ்எஸ் அமைப்பு ஈடுபட்டுள்ளது. இது குறித்து அந்த வட்டாரங்கள் கூறியதாவது:

ஆர்எஸ்எஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குழுவும் 5 முதல் 10 பேரைச் சந்திக்கிறது. இந்தக் கூட்டங்களின்போது இக்குழுவினர் வெளிப்படையாக பாஜகவை ஆதரித்துப் பேசுவதில்லை. மாறாக, தேசிய நலன் சார்ந்த விவகாரங்கள், ஹிந்துத்துவம், நல்லாட்சி, வளர்ச்சி, மக்களின் நலவாழ்வு உள்ளிட்ட விவகாரங்களையும் உள்ளூர் பிரச்னைகளையும் மக்களிடம் எடுத்துக் கூறி ஆதரவு திரட்டுகின்றனர்.

இந்தக் குழுக்களை அமைப்பதற்கு முன்பாக ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் கிளை அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடைபெற்றன. ஏற்கெனவே ஹரியாணா முழுவதும் ஆர்எஸ்எஸ் தன் கிளை அமைப்புகளுடன் நடத்திய கூட்டங்கள் அந்த மாநிலத்தில் பாஜகவின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது.

ஹரியாணாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த குழுக்கள் 1.25 லட்சம் சிறிய அளவிலான கூட்டங்களை நடத்தின என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிரத்தில் பாஜக போதிய வெற்றியைப் பெற முடியாமல் போனதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஆர்வமின்றிச் செயல்பட்டதும் ஒரு காரணமாகக் கருதப்பட்டது.

"பாஜகவுக்கு முதலில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதரவு தேவைப்பட்டது. எனினும் தற்போது கட்சி சுயமாகவே செயல்படுகிறது' என்று மக்களவைத் தேர்தலின்போது பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா கருத்து தெரிவித்தார். இந்தக் கருத்து காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் பாஜகவுக்காக தேர்தல் பணியாற்றுவதில் இருந்து ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஒதுங்கியிருந்தனர்.

எனினும், தற்போது நடைபெற உள்ள மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலுக்காக ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் தீவிரமாகக் களமிறங்கி பணியாற்றி வருவது பாஜகவினருக்கு நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. ஹரியாணாவில் பயன்படுத்தப்பட்ட உத்தியானது மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலிலும் நல்ல பலனளிக்கும் என்று அக்கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com