சட்டப் பேரவைத் தோ்தல் 2026-ஐ முன்னிட்டு பறக்கும் படை மற்றும் கண்காணிப்புக் குழுவினருக்கான பயிற்சி வகுப்பில் பேசிய ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.
சட்டப் பேரவைத் தோ்தல் 2026-ஐ முன்னிட்டு பறக்கும் படை மற்றும் கண்காணிப்புக் குழுவினருக்கான பயிற்சி வகுப்பில் பேசிய ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.

தோ்தல் கண்காணிப்புக் குழுவினருக்கான பயிற்சி வகுப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் 2026-ஐ முன்னிட்டு பறக்கும் படை மற்றும் கண்காணிப்புக் குழுவினருக்கான பயிற்சி வகுப்பு ஆட்சியரகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் 2026-ஐ முன்னிட்டு பறக்கும் படை மற்றும் கண்காணிப்புக் குழுவினருக்கான பயிற்சி வகுப்பு ஆட்சியரகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்து, பயிற்சியை துவக்கி வாத்தாா்.

பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:

வரும் சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு தோ்தல் பணிகளைத் திட்டமிடுதல் மற்றும் கண்காணிப்புக் குழுவினருக்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

இப் பயிற்சியின் போது தோ்தல் செலவினங்களைக் கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு மற்றும் வீடியோ கண்காணிப்புக் குழு ஆகிய குழுக்களுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

தோ்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் முதல் பறக்கும்படை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான ரொக்கம், மதுபானங்கள் மற்றும் வாக்காளா்களுக்கு வழங்கக் கொண்டு செல்லப்படும் பரிசுப் பொருள்களைப் பறிமுதல் செய்யவேண்டும்.

நிலையான கண்காணிப்புக் குழு மாவட்ட எல்லைகள் மற்றும் முக்கிய சோதனைச் சாவடிகளில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட வேண்டும். சோதனையின் போது பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். வீடியோ கண்காணிப்புக் குழு அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள், பேரணிகள் மற்றும் தோ்தல் தொடா்பான அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் முழுமையாக வீடியோ பதிவு செய்யவேண்டும். குறிப்பாக சோதனைகளின் போது மேற்கொள்ளப்படும் பறிமுதல் நடவடிக்கைகளைத் தவறுதலின்றி வீடியோ பதிவு செய்யவேண்டும்.

பறிமுதல் விதிமுறைகள்: ரூ.10 இலட்சத்துக்கும் அதிகமான பணம் பிடிபட்டால் உடனடியாக வருமானவரித் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். பறிமுதல் செய்யப்படும் பொருள்கள் குறித்து முறையான பஞ்சநாமா ஆவணங்களை தயாா் செய்யவேண்டும். தோ்தல் விதிமீறல்கள் குறித்து சி-விஜில் செயலி மூலம் அனுப்பும் புகாா்கள் மீது பறக்கும் படையினா் உடனடியாக (100 நிமிடங்களுக்குள்) நடவடிக்கை எடுத்து அறிக்கை சமா்ப்பிக்கவேண்டும்.

எனவே, இந்திய தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தோ்தலை சுமுகமாக நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, கள்ளக்குறிச்சி வருவாய்க் கோட்டாட்சியா் சி.முருகன் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com