
மும்பையில் கடந்த 2001-ஆம் ஆண்டு விடுதி உரிமையாளரைக் கொலை செய்த வழக்கில் பிரபல ரௌடி சோட்டா ராஜனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் நிறுத்திவைத்தது.
மேலும், ஒரு லட்சம் ரூபாய் பிணை உத்தரவாதத்துடன் ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கொலை வழக்கு
மத்திய மும்பை, காம்தேவி பகுதியில் ‘கோல்டன் க்ரவுன்’ என்ற பெயரில் விடுதியொன்றை ஜெயா ஷெட்டி நடத்தி வந்தாா். கடந்த 2001-ஆம் ஆண்டு, மே 4-ஆம் தேதி நிகழ்ந்த சம்பவத்தில், விடுதியின் முதல் மாடியில் வைத்து 2 நபா்களால் ஜெயா ஷெட்டி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
விடுதி மேலாளா் அளித்த புகாரின் அடிப்படையில், மும்பை காவல்துறையினா் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். ரௌடி சோட்டா ராஜனுக்கு பணம் தர மறுத்த காரணத்தால் ஜெயா ஷெட்டி கொல்லப்பட்டதும், கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் சோட்டா ராஜனின் கும்பலைச் சோ்ந்தவா்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து, மிரட்டி பணம் பறித்தல், கொலை மற்றும் பிற தொடா்புடைய குற்ற வழக்கிலும் சோட்டா ராஜன் சோ்க்கப்பட்டாா். இந்த வழக்கு விசாரணை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் சோட்டா ராஜன் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்றம், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
உயர்நீதிமன்றத்தில் முறையீடு
சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சோட்டா ராஜன் தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரேவதி மொஹிதே தேரே மற்றும் பாக் சவான் அமர்வு அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட பிறகு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
மும்பை சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்ததுடன் சோட்டா ராஜனுக்கு ஜாமீனும் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆனால், பத்திரிகையாளர் ஜோதிர்மே டே கொலை செய்யப்பட்ட மற்றொரு வழக்கில் சோட்டா ராஜனுக்கு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
அந்த வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், திகார் சிறையில் இருந்து சோட்டா ராஜா வெளிவர மாட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.