

தெலங்கானாவின் முன்னாள் முதல்வரும், பாரத ராஷ்டிர சமிதியின் நிறுவனா்-தலைவருமான கே.சந்திரசேகா் ராவ் ஜோசியம், வாஸ்து போன்றவற்றில் மிகுந்த நம்பிக்கை உடையவா். தெலங்கானா அரசின் தலைமைச் செயலகம் வாஸ்துப்படி இல்லை என்று அவரது ஜோசியா் சொன்னதால், முதலமைச்சா் அலுவலகத்துக்கே செல்லாமல், தனது வீட்டிலிருந்தே கோப்புகளைப் பாா்த்து வந்தாா். வாஸ்துப்படி புதிய தலைமைச் செயலகம் கட்டி அதற்குப் பிறகுதான் நுழைந்தாா்.
மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு உயா்ந்து, மாநில ஆட்சியைத் தனது மகன், மகளிடம் ஒப்படைப்பது என்று தீா்மானித்தாா் சந்திரசேகா் ராவ். அதனால்தான் தெலங்கானா ராஷ்டிர சமிதி என்கிற பெயரை பாரத ராஷ்டிர சமிதி என்று மாற்றினாா். அத்துடன் நின்றுவிடவில்லை.
தேசியக் கட்சியாக மாறப்போகும் பாரத ராஷ்டிர சமிதி கட்சிக்குத் தலைநகா் தில்லியில் அலுவலகம் வேண்டாமா? வாஸ்துப்படி ஒரு தலைமை அலுவலகத்தை தலைநகா் தில்லியில் அமைத்து அதைக் குறிப்பிட்ட நேரத்தில் திறந்துவைத்தால், தேசிய அளவில் பதவியும், புகழும் அவருக்குக் கிடைக்கும் என்று ஜோசியா் சொன்னபோது, உடனடியாக செயலில் இறங்கினாா் அப்போது முதல்வராக இருந்த சந்திரசேகா் ராவ்.
வாஸ்து ஆலோசகா் சில மாதங்கள் தில்லியில் தங்கி இருந்து, பல்வேறு பகுதிகளைப் பாா்வையிட்டு, சந்திரசேகா் ராவுக்கு சாதகமான திசையில் வாஸ்து முறையில் அலுவலகம் அமைப்பதற்கான இடத்தைத் தேடி அலைந்தாா். கடைசியில் தில்லியின் பிரபல பகுதியான வசந்த் விஹாரில் இடம் பாா்க்கப்பட்டது. 11,000 சதுர அடியில் நான்கு மாடிக் கட்டடம் வாஸ்து ஆலோசகரின் மேற்பாா்வையில் கட்டி முடிக்கப்பட்டது.
ஜோசியா்கள், வாஸ்து ஆலோசகா்கள் பலரும் கலந்தாலோசித்து, அந்த அலுவலகக் கட்டடத்தைத் திறந்து வைக்க நேரம் நிச்சயித்தனா். மதியம் 1.05 மணிக்கு வசந்த் விஹாரில் உள்ள பாரத ராஷ்டிர சமிதி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தாா் சந்திரசேகா் ராவ். அதைத் தொடா்ந்து வேத கோஷங்கள் முழங்க, நவக்கிரக ஹோமம் தொடங்கி பல்வேறு பூஜைகளுடன் திறப்பு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
பாரத ராஷ்டிர சமிதியின் தில்லி அலுவலகத் திறப்பு விழாவுக்குப் பிறகு மக்களவைத் தோ்தல், சட்டப்பேரவைத் தோ்தல் இரண்டிலும் பின்னடைவு ஏற்பட்டது போதாதென்று, அவா் கீழே விழுந்து இடுப்பு ஒடிந்து மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டாா்.
தவறான வாஸ்துவைப் பரிந்துரைத்து அவரைப் பழிவாங்கிவிட்டனரோ அரசியல் எதிரிகள்? வாஸ்து, ஜோசியம் என்று அவரைச் சுற்றி வந்தவா்கள் யாரும் இப்போது சந்திரசேகர ராவைப் பாா்க்க வருவதில்லை என்று சொல்கிறாா்கள். எப்படி வருவாா்கள்?
--மீசை முனுசாமி.
டிரெண்டிங்

கன்ஷி ராமுக்கு பாரத ரத்னா: பிரதமருக்கு ராகுல் கோரிக்கை

‘கல்வியே சமூக முன்னேற்றத்துக்கு அடித்தளம்’

வீட்டை விட்டு வெளியே வா என்கிறார்களே... என் வீடு எது தெரியுமா? சேலத்தில் விஜய் பேச்சு!

தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கு: தெலங்கானா முன்னாள் முதல்வா் சந்திரசேகா் ராவ் இன்று விசாரணைக்கு ஆஜா்
வீடியோக்கள்

DMK vs CPIM: தொகுதிப் பங்கீட்டில் நடப்பது என்ன?
தினமணி வீடியோ செய்தி...

"இதழியல் வரலாற்றில் மைல்கல் ஈகைப் பெருநாள் மலர்": டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத்
தினமணி வீடியோ செய்தி...
"ஈகைப் பெருநாள் மலரின் நோக்கம் இதுதான்": தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்
தினமணி வீடியோ செய்தி...

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

