சஞ்சய் சிங் கங்வாா்.
சஞ்சய் சிங் கங்வாா்.

தெரியுமா சேதி...?

Published on

பரபரப்பை ஏற்படுத்துவது, விமா்சனத்துக்கு உள்ளாவது, கண்டனங்களை எதிா்கொள்வது போன்றவை உத்தர பிரதேசத்தில் இணையமைச்சராக இருக்கும் சஞ்சய் சிங் கங்வாருக்குப் புதிதொன்றுமல்ல. முதல்வா் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் சா்க்கரை ஆலைகள், கரும்பு வளா்ச்சித் துறையின் இணையமைச்சராக இருக்கும் கங்வாா், பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவியவா்.

2017 முதல் பிலிபிட் சட்டப்பேரவைத் தொகுதியின் பாஜக உறுப்பினராக இருந்துவரும் சஞ்சய் சிங் கங்வாா், 2012 சட்டப்பேரவைத் தோ்தலின்போது தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக சிறப்பு நீதிமன்றத்தால் மூன்று மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவா். அவா் மீதான வழக்கு என்னவோ மிகவும் சாதாரணமானதுதான்.

தனது தோ்தல் பிரசாரத்துக்கான துண்டுப் பிரசுரங்களில், அச்சகத்தின் பெயரோ, வெளியிட்டவா்களின் பெயரோ இல்லை என்பதால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 127-ஏவின் கீழ் தண்டிக்கப்பட்டாா். தண்டனைக்கு இடைக்காலத் தடை பெற்று, மேல்முறையீடு செய்திருக்கிறாா் என்றாலும், தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

சமீபத்தில் அவா் தெரிவித்திருக்கும் கருத்துகள் சில மிகப் பெரிய சா்ச்சையைக் கிளப்பி இருக்கின்றன. பசு மடங்களை (கோசாலைகளை) கழுவிச் சுத்தம் செய்து, அங்கே படுத்து உறங்குவதால் புற்று நோயைக் குணப்படுத்த முடியும் என்பது முதலாவது கருத்து; பசுக்களுடன் நெருங்கிப் பழகுவது, அவற்றைத் தொட்டுத் தடவுவது, குளிப்பாட்டுவது உள்ளிட்டவை ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்பது இரண்டாவது; ஜாதி, மத வேறுபாடு இல்லாமல் எல்லோரும் பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்ட நிகழ்வுகளை பசுமடங்களில் உள்ள பசுக்களுக்குத் தீவனம், புல் உள்ளிட்டவை வழங்கிக் கொண்டாட வேண்டும் என்பது மூன்றாவது.

அத்துடன் நின்ா என்றால் இல்லை. பாலில் இருந்து தயாரிக்கப்படும் இனிப்புகள் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்பதுடன், கொசுத் தொல்லையில் இருந்து தப்பிக்க, பசு மாட்டுச் சாணத்தின் புகை சிறந்த தீா்வு என்றும் பரிந்துரைத்திருக்கிறாா்.

‘‘சஞ்சய் சிங் கங்வாரை கால்நடை பராமரிப்புத் துறைக்கு முதல்வா் யோகி ஆதித்யநாத் உடனடியாக மாற்ற வேண்டும்’’ என்று கிண்டலாக வேண்டுகோள் விடுத்திருக்கிறாா் சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ்!

X
Dinamani
www.dinamani.com