ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி 8 பேர் பலியானார்கள்.
ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் பல்வேறு பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. கிருஷ்ணா, குண்டூர் மாவட்டங்களில் வீடுகள் இடிந்து 4 பேர் பலியானார்கள். மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு சிலர் மாயமானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர்.
சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் மகபூபாபாத்-கேசமுத்ரம் இடையேயான ரயில் தண்டவாளம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது.
விஜயவாடாவிலிருந்து செல்லும் 12 ரயில் சேவைகளை ரத்து செய்து மத்திய தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விஜயவாடா, செகந்திராபாத், குண்டூர் ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து செல்லும் 2 ரயில்கள் மாற்று வழியில் இயக்கப்படுகிறது. மேலும் கனமழையால் பாதிக்கப்பட்ட ரயில் பயணிகளுக்கான தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ரயில் ரத்து, மாற்று பாதை விவரங்களை 044-253549995, 044-25354151 என்ற எண்களில் தொடர்புகொண்டு அறியலாம். இதனிடையே வெள்ளம் காரணமாக பள்ளிகள் அனைத்திற்கும் நாளை(செப். 2) விடுமுறை அறிவித்து ஹைதராபாத் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.