அஸ்ஸாம் முதல்வர் மீது இனவெறி கருத்து தெரிவித்ததாகக் கூறி, தேஜஸ்வி யாதவ் மீது மணிப்பூர் முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜும்மா பிரார்த்தனைகளுக்காக இரண்டு மணிநேர சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை ஒத்திவைக்கும் நடைமுறையை ரத்து செய்வதாக அஸ்ஸாம் அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், முஸ்லீம்களுக்காக எதிராக செயல்படுவதாகக் கூறி, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவை `சீனப் பதிப்பு’ என்று ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, தேஜஸ்வி யாதவுக்கு பதிலளிக்கும் விதமாக ஹிமந்த பிஸ்வா சர்மா ``இரண்டு மணி நேர ஜும்மா இடைவேளையை நீக்குவது என்பது முதல்வரின் தனிப்பட்ட முடிவு அல்ல. அனைத்து இந்து மற்றும் முஸ்லீம் சட்டப்பேரவை உறுப்பினர்களின் முடிவே.
இந்த முடிவை சட்டப்பேரவைத் தலைவர் அறிவித்தபோது, அவையில் இருந்த எந்த முஸ்லீம் எம்.எல்.ஏ.வும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அஸ்ஸாம் சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 126 எம்.எல்.ஏ.க்களில் 25 பேர் முஸ்லீம்களே’’ என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், மணிப்பூர் முதல்வரான, பாஜகவைச் சேர்ந்த பிரேன் சிங் ``நமது நாட்டின் வரலாறு மற்றும் புவியியல் பற்றி அறிவற்ற இன வெறியாளர்களால்தான் இந்தியா கூட்டணி உருவானதாகத் தெரிகிறது. தேஜஸ்வி யாதவ்தான் வடகிழக்கு மக்களை இனவெறிக்கு உட்படுத்துகிறார்.
நாட்டின் பிற பகுதிகளைப் போலவே நாங்களும் இந்தியர்களே; இதை நாங்கள் நிரூபிக்கத் தேவையில்லை. இருப்பினும், வடகிழக்கை நோக்கிய இந்தியா கூட்டணியின் இந்த இனவெறி நிறுத்தப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.