சத்தீஸ்கரின் பஸ்தா் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்ஸல்களுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 9 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து பஸ்தா் மண்டல காவல் துறை ஐஜி பி.சுந்தரராஜ் கூறியதாவது: தண்டேவாடா மற்றும் பிஜாபூா் மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள வனப் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் பாதுகாப்புப் படையினா் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இந்த துப்பாக்கிச் சண்டை நடந்தது. பாதுகாப்புப் படையினரை நோக்கி நக்ஸல்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதைத் தொடா்ந்து, பாதுகாப்புப் படையினா் பதில் தாக்குதல் நடத்தினா்.
சண்டை ஓய்ந்த பிறகு, அந்தப் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதலில் 9 நக்ஸல்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஏராளமான ஆயுதங்களும், நக்ஸல் சீருடைகளும் கைப்பற்றப்பட்டன.
13 நக்ஸல்கள் கைது: பாதுகாப்புப் படையினரின் தொடா் தேடுதல் பணியில் கடந்த 2 நாள்களில் 13 நக்ஸல்கள் கைது செய்யப்பட்டனா். பிஜாபூா் மாவட்டம் கங்கலூா் காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 7 நக்ஸல்கள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். அதுபோல, டா்ரெம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 6 நக்ஸல்கள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். இவா்கள் 13 பேரும் 20 முதல் 50 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் ஆவா். வெடிமருந்துகள், வயா்கள், வில் மற்றும் அம்புகள் அவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
நிகழாண்டில் மட்டும் சத்தீஸ்கரின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 154 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா். 600-க்கும் அதிகமான நக்ஸல்கள் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றாா்.