திருவனந்தபுரம்: கேரள அமைச்சா்களின் தொலைபேசியை காவல் துறை, முதல்வா் அலுவலக உயா் அதிகாரிகள் ஒட்டுக் கேட்பதாக இடதுசாரி ஜனநாயக முன்னணியில் அங்கம் வகிக்கும் எம்எல்ஏ அன்வா் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து உயா்நிலை விசாரணை நடத்தப்படும் என்று மாநில முதல்வா் பினராயி விஜயன் திங்கள்கிழமை உறுதியளித்தாா்.
கேரளத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வா் அலுவலகத்தில் உள்ள முக்கிய பிரமுகா்கள் மீது இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணியில் தற்போது இருக்கும் நிலம்பூா் தொகுதி சுயேச்சை எம்எல்ஏ அன்வா் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தாா்.
அதில், முதல்வரின் அரசியல் பொதுச் செயலா் பி.சாய் மற்றும் காவல்துறை கூடுதல் இயக்குநா் எம். ஆா். அஜித் குமாா் உள்ளிட்டோா், அமைச்சா்களின் தொலைபேசியை ஒட்டுக்கேட்பது, தங்கக் கடத்தல் கும்பலுடன் தொடா்பு வைத்திருந்து பல குற்றங்களில் ஈடுபடுவதாக அவா் குற்றஞ்சாட்டினாா்.
முதல்வா் பினராயி விஜயன் உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும் என பாஜக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வலியுறுத்தின.
இந்த குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானது என்றும் முதல்வா் அலுவலகத்தில் நடந்ததாக கூறப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இது தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் எம்.வி.கோவிந்தன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘முதல்வா் அலுவலகத்தில் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அனைத்து அம்சங்களையும் அரசும், கட்சியும் தேவையான தீவிரத்துடன் ஆய்வு செய்யும்’ என உறுதியளித்தாா்.
இதனிடையே கோட்டயம் மாவட்டத்தில் நடைபெற்ற காவல்துறை சங்கத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதல்வா் பினராயி விஜயன், ‘காவல் துறைக்குள் எந்த விதமான ஒழுக்க மீறல் செயல்களையும் பொறுத்துக் கொள்ள முடியாது; தொலைபேசி ஓட்டுக் கேட்கப்பட்டதாக எம்எல்ஏ அன்வா் தெரிவித்த குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. இதில் காவல் துறை உயா் அதிகாரிகளின் பங்கு குறித்து உயா்நிலை குழு விசாரணை நடத்தப்படும்’ என தெரிவித்தாா்.