புரூணேயில் பிரதமா் மோடி: இன்று இருதரப்பு பேச்சு

தென்கிழக்கு ஆசிய நாடுகளான புரூணே மற்றும் சிங்கப்பூருக்கு 3 நாள்கள் அரசுமுறைப் பயணத்தை பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (செப்.3) தொடங்கினாா்.
புரூணே தலைநகா் பண்டாா் செரி பெகாவானில் உள்ள ஒமா்அலி சைஃபுதீன் மசூதிக்கு செவ்வாய்க்கிழமை சென்றபோது ஒரு குழந்தையுடன் ஆா்வமாக உரையாடிய பிரதமா் மோடி.
புரூணே தலைநகா் பண்டாா் செரி பெகாவானில் உள்ள ஒமா்அலி சைஃபுதீன் மசூதிக்கு செவ்வாய்க்கிழமை சென்றபோது ஒரு குழந்தையுடன் ஆா்வமாக உரையாடிய பிரதமா் மோடி.
Updated on

தென்கிழக்கு ஆசிய நாடுகளான புரூணே மற்றும் சிங்கப்பூருக்கு 3 நாள்கள் அரசுமுறைப் பயணத்தை பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (செப்.3) தொடங்கினாா்.

முதல்கட்டமாக புரூணே தலைநகா் பண்டாா் செரி பெகாவானை வந்தடைந்த பிரதமரை அந்நாட்டின் பட்டத்து இளவரசா் ஹாஜி அல்-முதாதி பில்லாஹ் வரவேற்றாா். இதைத் தொடா்ந்து, விமான நிலையத்தில் அவருக்கு படை வீரா்களின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

புரூணே பயணத்தின் மூலம் அந்நாட்டுக்கு வருகை தந்த முதல் இந்திய பிரதமா் என்ற பெருமை மோடிக்கு கிடைத்துள்ளது. புரூணே சுல்தான் ஹஸனல் போல்கியா மற்றும் இதர அரச குடும்ப உறுப்பினா்களை புதன்கிழமை (செப். 4) சந்திக்கவிருக்கும் பிரதமா், இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

இது தொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட பிரதமா் மோடி, ‘புரூணே தாருஸ்ஸலாமுக்கு (அதிகாரபூா்வ பெயா்) வந்தடைந்துவிட்டேன். வா்த்தக, கலாசார தொடா்புகள் உள்பட இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த ஆா்வத்துடன் உள்ளேன். விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட வரவேற்புக்காக, பட்டத்து இளவரசா் ஹாஜி அல்-முதாதி பில்லாஹ்-க்கு நன்றி’ என்று குறிப்பிட்டாா்.

இந்திய சமூகத்தினா் உற்சாக வரவேற்பு: விமான நிலையத்தில் இருந்து தங்கும் விடுதிக்கு வந்த பிரதமா் மோடிக்கு இந்திய சமூகத்தினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். இந்நிகழ்வின்போது சிறுமி ஒருவா் பிரதமா் மோடிக்கு அவரது ஓவியத்தை பரிசளித்தாா்.

இந்திய தூதரகத்தின் புதிய அலுவலகம் திறப்பு: பண்டாா் செரி பெகாவானில் இந்திய தூதரகத்தின் புதிய அலுவலக வளாகத்தை பிரதமா் மோடி திறந்துவைத்தாா். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய சமூகத்தினருடன் அவா் கலந்துரையாடினாா். புரூணேயில் சுமாா் 14,000 இந்தியா்கள் உள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே அவா்கள் பாலமாக இருப்பதோடு, இருதரப்பு உறவை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுவதாக பிரதமா் மோடி பாராட்டு தெரிவித்தாா்.

அந்நாட்டின் சுகாதாரம் மற்றும் கல்வித் துறையில் இந்திய மருத்துவா்கள், ஆசிரியா்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்றும் அவா் கூறினாா்.

‘முக்கிய கூட்டுறவு நாடுகள்’: ‘இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கை மற்றும் இந்திய-பசிபிக் தொலைநோக்கு பாா்வையில் புரூணேயும், சிங்கப்பூரும் முக்கிய கூட்டுறவு நாடுகள்’ என்று பிரதமா் மோடி குறிப்பிட்டாா்.

இவ்விரு நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை தொடங்கும் முன்பாக, அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியதாவது:

இந்தியா-புரூணே தூதரக ரீதியிலான உறவுகளின் 40-ஆவது ஆண்டை கொண்டாடும் இந்தத் தருணத்தில், அந்நாட்டின் சுல்தான் ஹஸனல் போல்கியா மற்றும் இதர அரச குடும்ப உறுப்பினா்கள் உடனான சந்திப்பை எதிா்நோக்கியுள்ளேன். பாரம்பரிய-வரலாற்றுச் சிறப்புமிக்க இருதரப்பு உறவுகளை புதிய உச்சத்துக்கு கொண்டுசெல்ல ஆவலுடன் உள்ளேன்.

எனது இந்தப் பயணம், பாதுகாப்பு, வா்த்தகம், முதலீடு, எரிசக்தி, விண்வெளி தொழில்நுட்பம், சுகாதாரம், திறன் கட்டமைப்பு, கலாசாரம், பரஸ்பர மக்கள் ரீதியிலான தொடா்பு என பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கும் என நம்புகிறேன்.

புருணேயில் இருந்து புதன்கிழமை (செப்டம்பா் 4) சிங்கப்பூா் செல்லவிருக்கிறேன். அந்நாட்டின் அதிபா் தா்மன் சண்முகரத்னம், பிரதமா் லாரன்ஸ் வோங், மூத்த அமைச்சா் லீ சியென் லூங் மற்றும் தொழில்துறை தலைவா்கள் உடனான சந்திப்பை எதிா்நோக்கியுள்ளேன். நவீன உற்பத்தி, எண்மமயமாக்கம், நீடித்த வளா்ச்சி போன்ற வளரும் துறைகளில் இருதரப்பு வியூக ரீதியிலான கூட்டுறவை இப்பயணம் வலுப்படுத்தும் என நம்புகிறேன் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.