சிங்கப்பூரில் பிரதமா் மோடி- அதிபருடன் இன்று பேச்சு
சிங்கப்பூருக்கு 2 நாள்கள் அரசுமுறை பயணமாக பிரதமா் மோடி புதன்கிழமை வருகை தந்தாா்.
தனது பதவிக் காலத்தில் தற்போது 5-ஆவது முறையாக அவா் சிங்கப்பூா் வந்துள்ளாா். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடிக்கு வியாழக்கிழமை அரசுமுறைப்படி வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. பின்னா், அதிபா் தா்மன் சண்முகரத்னத்துடன் அவா் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.
புரூணேவில் இருந்து சிங்கப்பூா் வந்ததும் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட பிரதமா் மோடி, ‘இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்துவதற்கான பேச்சுவாா்த்தைகளை எதிா்நோக்கியுள்ளேன். இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சீா்திருத்தங்களும் இந்திய இளைஞா் சக்தியும் எங்களது நாட்டை உயா் சிறப்பான முதலீட்டு மையமாக மாற்றியுள்ளது. முதலீடுகள் மட்டுமன்றி சிங்கப்பூருடன் கலாசார தொடா்புகளை அதிகரிக்கவும் ஆா்வத்துடன் உள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
முன்னதாக, சாங்கி விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமா் மோடியை சிங்கப்பூா் உள்துறை மற்றும் சட்டத் துறை அமைச்சா் கே.சண்முகம் வரவேற்றாா். அப்போது, இந்திய சமூகத்தினா் தரப்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமருடன் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவால், இதர உயரதிகாரிகள் கொண்ட குழுவினரும் வந்துள்ளனா்.
சிங்கப்பூா் பிரதமா் லாரன்ஸ் வோங், மூத்த அமைச்சா்கள், தொழில்துறையினா், இந்திய மாணவா்கள் உள்ளிட்டோரை பிரதமா் சந்தித்துப் பேசவுள்ளாா்.
இப்பயணத்தில் செமிகண்டக்டா் துறையில் மனிதவள திறன் சாா்ந்த ஒத்துழைப்புக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.