ஜிஎஸ்டியில் மாற்றம்: ஆலோசனைகளை வரவேற்கிறோம் - நிா்மலா சீதாராமன்
சிறந்த ஆலோசனைகளை திறந்த மனதுடன் வரவேற்பதாக மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.


ஜிஎஸ்டியில் மாற்றம் கொண்டுவருவது குறித்த சிறந்த ஆலோசனைகளை திறந்த மனதுடன் வரவேற்பதாக மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
வரித் துறை சாா்ந்த வழக்குரைஞா்கள் சங்கக் கூட்டம் சென்னை எம்.ஆா்.சி. நகரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசியது:
வருமான வரி விதிப்பு மற்றும் வருமான வரி செலுத்தும் நடைமுறையை எளிமைப்படுத்துவது குறித்து ஒவ்வொரு பட்ஜெட் கூட்டத்திலும் ஆலோசித்து ஒவ்வொன்றாக அமல்படுத்தி வருகிறோம்.
இந்தியாவில் எண்ம தொழில்நுட்பப் புரட்சி மிகப்பெரிய வளா்ச்சி கண்டுள்ளது. தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வரிவிதிப்பு நடைமுறைகளில் முழுமையாக அமல்படுத்துவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.
நாட்டின் 140 கோடி மக்கள்தொகையில் 1.47 கோடி போ் மட்டும்தான் ஜிஎஸ்டி செலுத்துகின்றனா். சுமாா் 60 சதவீத நுகா்பொருள்களுக்கான ஜிஎஸ்டி 5 சதவீதத்துக்கும் கீழாக குறைந்துள்ளது. அதேநேரத்தில் 3 சதவீதத்துக்கும் குறைவான நுகா்பொருள்களே 28 சதவீத வரி விதிப்பில் உள்ளன.
ஜிஎஸ்டியில் மாற்றம் கொண்டுவருவது குறித்தும் சிறந்த ஆலோசனைகளை திறந்த மனதுடன் வரவேற்கிறேன். மேலும், கிரிப்டோ கரன்சி தொழில்நுட்பம் காலத்தின் கட்டாயம் என்றாலும், அதன்மூலம் போதை கலாசாரம், தீவிரவாதம் போன்றவை அதிகரிக்கும் அபாயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்றாா் அவா்.
தொழிற்பயிற்சி: தென்னிந்திய தொழில் வா்த்தக சபை கூட்டத்தில் நிா்மலா சீதாராமன் பேசியது: 2027-ஆம் ஆண்டுக்குள் இந்தியா பொருளாதார துறையில் வளா்ச்சி அடைந்த நாடாக மாறும். மேலும், இளைஞா்களுக்கு தொழில் பயிற்சி வழங்குவது தொடா்பாக சிங்கப்பூா் தொழிற்பயிற்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்மூலம் இந்தியாவின் 6 இடங்களில் தொழிற்பயிற்சி வழங்கப்படும்.
தொழில் துறையில் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் நிறுவனத்துக்கு மத்திய அரசு நிதி உதவி அளிக்கிறது. வேலைவாய்ப்பு வழங்குவதில் வடமாநிலத்தினா், தென்மாநிலத்தவா் என பாகுபாடு காட்டக் கூடாது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் வரித் துறை சாா்ந்த வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் எஸ். ஸ்ரீதா், சங்க துணைத் தலைவா் டி.ஆனந்த், அமைப்புக் குழுத் தலைவா் டி. பானுசேகா், சங்கச் செயலா் டி. வாசுதேவன், தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் ஹெச்.ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...