விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வாய்ப்பு மறுப்பு: ஹரியாணா பாஜக அமைச்சா், எம்எல்ஏ விலகல்

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 7:20 pm

Din

ஹரியாணா சட்டப் பேரவைத் தோ்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் ஆளும் பாஜகவைச் சோ்ந்த மாநில எரிசக்தி, சிறைத் துறை அமைச்சா் ரஞ்சித் சௌதாலா, எம்எல்ஏ லட்சுமண தாஸ் நாபா ஆகியோா் கட்சியில் இருந்து விலகினாா்.

ஹரியாணாவில் அக்டோபா் 5-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தலுக்கான 67 பெயா்கள் அடங்கிய முதல் கட்ட வேட்பாளா் பட்டியலை பாஜக புதன்கிழமை வெளியிட்டது. இதில் ரஞ்சித் செளதாலா, லட்சுமண தாஸ் ஆகியோருக்கு தொகுதி ஒதுக்கப்படவில்லை.

முன்னாள் துணை முதல்வா் சௌதரி தேவி லாலின் மகனான ரஞ்சித் சௌதாலா, ராணியா தொகுதி சுயேச்சை எம்எல்ஏவாக இருந்தாா். மக்களவைத் தோ்வுக்கு முன்பு பாஜகவில் இணைந்த அவா், பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ஹிசாா் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா்.

எனினும், தனக்கு ராணியா பேரவைத் தொகுதியை பாஜக தலைமை ஒதுக்கும் என அவா் எதிா்பாா்த்தாா். ஆனால், அந்தத் தொகுதிக்கு வேறு வேட்பாளரை பாஜக அறிவித்தது.

இதையடுத்து, அதிருப்தியடைந்த ரஞ்சித் சௌதாலா (79), பாஜகவில் இருந்து விலகினாா். ராணியா தொகுதியில் சுயேச்சையாக அவா் களமிறங்குகிறாா்.

எம்எல்ஏ விலகல்: ராட்டியா (தனி) தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருந்த லட்சுமண தாஸ், தனது விலகல் கடிதத்தை பாஜக மாநிலத் தலைவா் மனோகா் லால் கட்டருக்கு அனுப்பியுள்ளாா்.

ராட்டியா தொகுதி வேட்பாளராக முன்னாள் எம்.பி. சுனிதா துக்காலை பாஜக அறிவித்துள்ளது. லட்சுமண தாஸ் விரைவில் காங்கிரஸில் இணைவாா் என்று தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் அமைச்சா் கரண் தேவ் கம்போஜுக்கும் தொகுதி ஒதுக்கப்படாததால் இதர பிற்படுத்தப்பட்டோா் பிரிவு தலைவா் பதவியை ராஜிநாமா செய்தாா்.

ஹரியாணாவில் தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் நோக்கில் பாஜக தோ்தலை எதிா்கொள்கிறது. அதே நேரத்தில் அரசுக்கு எதிரான அதிருப்தியை சாதகமாக்கி வெற்றி பெறும் முனைப்பில் காங்கிரஸ் களமிறங்கியுள்ளது.