வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள மலாவிக்கு 1,000 மெட்ரிக் டன் அரிசி: இந்தியா மனிதாபிமான உதவி
வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவிக்கு 1,000 மெட்ரிக் டன் (10 லட்சம் கிலோ) அரிசியை மனிதாபிமான உதவியாக இந்தியா அனுப்பி வைத்தது.
இது தொடா்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வாஸ் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மலாவி மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவும் நோக்கில் 1,000 மெட்ரிக் டன் அரிசி அந்நாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது. ‘எல் நீனோ’ விளைவு காரணமாக மலாவி கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, உணவுத் தேவையைச் சமாளிக்க இந்தியா இந்த உதவியை அளித்துள்ளது’ என்று கூறியுள்ளாா்.
உள்நாட்டில் அரிசி விலையைக் கட்டுக்குள் வைக்கும் நோக்கில் பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதியை மத்திய அரசு 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தடை செய்தது. அதே நேரத்தில், ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள், குறிப்பிட்ட நாடுகளின் அடிப்படை உணவுத் தேவையைக் கருத்தில் கொண்டு அவற்றுக்கு அரிசி ஏற்றுமதியை மத்திய அரசு அவ்வப்போது அனுமதித்து வருகிறது.
இதற்கு முன்பும், மலாவி, மலேசியா, நேபாளம், கேமரூன், கினியா, பிலிப்பின்ஸ், ஷெசல்ஸ், ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கும் பாசுமதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.