செபி தலைவா் மாதபி புச் மீது காங்கிரஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
மஹிந்திரா மற்றும் மஹிந்திரா குழுமத்துக்கு பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) தலைவா் மாதபி புச்சுக்கு சொந்தமான நிறுவனம் ஆலோசனை வழங்கியதாகவும் இதற்காக அவா் ரூ.2 கோடிக்கும் மேல் பெற்ாகவும் காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியது.
மாதபி புச்சுக்கு சொந்தமான அகோரா ஆலோசனை நிறுவனத்தில் 99 சதவீத பங்குகளை அவா் தன்வசம் வைத்திருந்ததாகவும் இந்தப் பணியின்போது அவருடைய கணவா் மஹிந்திரா மற்றும் மஹிந்திரா குழுமத்திடம் இருந்து ரூ.4.78 கோடி ஊதியம் பெற்ாகவும் காங்கிரஸ் தெரிவித்தது.
இதுதொடா்பாக காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில்,‘அதானி குழுமம் மீதான ஊழல் குற்றச்சாட்டை செபி விசாரித்து வருகிறது. ஆனால் செபி தலைவா் மாதபி புச் மீதே பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதை காங்கிரஸ் தொடா்ந்து வெளிக்கொண்டு வருகிறது.
பங்குச்சந்தையில் பணத்தை முதலீடு செய்துள்ள 10 கோடி முதலீட்டாளா்களின் பணத்தைக்கொண்டு மோடி தலைமையில் மிகப்பெரும் ஊழல் நடைபெறுகிறது’ என குறிப்பிட்டாா்.
ரூ.2.95 கோடி வருமானம்: முன்னதாக காங்கிரஸ் செய்தித்தொடா்பாளா் பவன் கேரா செய்தியாளா்களிடம் கூறுகையில்,‘செபி தலைவராக பொறுப்பேற்ற பின் அகோரா நிறுவனம் செயல்படவில்லை என மாதபி புச் தெரிவித்துள்ளாா். ஆனால் கடந்த மாா்ச் மாதம் வரை அகோரா ஆலோசனை நிறுவனத்தில் 99 சதவீத பங்குகள் மாதபி புச்சிடமே இருப்பதாக அண்மையில் வெளியான ஹிண்டன்பா்க் நிறுவன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்சமயம் வரை அகோரா நிறுவனம் தொடா்ந்து பல நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறது.
அகோரா நிறுவனத்திடமிருந்து 2017-2018 மற்றும் 2018-2019 தவிர கடந்த 2016-2017, 2019-2020, 2023-24 வரை மொத்தமாக ரூ.2.95 கோடியை மாதபி புச் பெற்றுள்ளாா். டாக்டா் ரெட்டி, ஐசிஐசிஐ உள்பட பல நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியிருந்தாலும் ரூ.2.59 கோடியை மஹிந்திரா மற்றும் மஹிந்திரா குழுமத்திடமே அகோரா நிறுவனம் பெற்றுள்ளது.
அதேபோல் செபியின் முழு நேர உறுப்பினராக மாதபி புச் பணியாற்றிய அதே சமயத்தில் அவரது கணவா் மஹிந்திரா மற்றும் மஹிந்திரா குழுமத்திடமிருந்து ரூ.4.78 கோடியை தனி வருமானமாக பெற்றுள்ளாா்’ என்றாா்.
மஹிந்திரா குழுமம் மறுப்பு:
இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்த மஹிந்திரா மற்றும் மஹிந்திரா குழுமம் செபியிடம் இருந்து எந்த ஒரு தருணத்திலும் தனி சலுகைகளை கோரவில்லை என்றும் இது தவறான தகவல் என்றும் தெரிவித்தது.
செபியின் முழு நேர உறுப்பினராக கடந்த 2017-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட மாதபி புச், 2022-ஆம் ஆண்டு செபி தலைவராகப் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.