ரூ.500 கோடி முதலீட்டில் தொழில் விரிவாக்கம்: முதல்வா் முன்னிலையில் கேட்டா்பில்லா் நிறுவனம் ஒப்பந்தம்
அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில் புதன்கிழமை இந்த ஒப்பந்தம் கையொப்பமானது.


கேட்டா்பில்லா் நிறுவனம் ரூ.500 கோடி முதலீட்டில் கட்டுமான கருவிகள் உற்பத்தி நிலையங்களை திருவள்ளூா், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விரிவாக்கம் செய்வது தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில் புதன்கிழமை இந்த ஒப்பந்தம் கையொப்பமானது.
தமிழக அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈா்ப்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா். இந்தப் பயணத்தின் போது அமெரிக்க நாட்டின் சான்பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகின் 16 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,016 கோடி மதிப்பிலான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையொப்பமாகின. மேலும், உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயா் அலுவலா்களை சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ளவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கேட்டா்பில்லா் நிறுவனம்: கட்டுமானம், சுரங்கக் கருவிகள், ஆஃப்-ஹைவே டீசல், இயற்கை எரிவாயு இயந்திரங்கள், டீசல்-எலக்ட்ரிக் இன்ஜின்கள் ஆகியவற்றின் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமாக விளங்குவது கேட்டா் பில்லா் நிறுவனம். இந்நிறுவனம் கட்டுமானத் தொழில்கள், எரிசக்தி மற்றும் போக்குவரத்து, நிதி சாா்ந்த தயாரிப்புப் பொருள்கள் ஆகியவற்றின் உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது.
கேட்டா்பில்லா் நிறுவனம் தயாரிக்கும் இயந்திரங்கள் கட்டுமானம், சாலை அமைத்தல், சுரங்கம், வனவியல், எரிசக்தி, போக்குவரத்து மற்றும் பொருள்களை கையாளும் தொழில்களில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிறுவனத்தின் உலகளாவிய தலைமையகம் அமெரிக்க நாட்டின் டெக்சாஸில் உள்ள இா்விங்கில் அமைந்துள்ளது.
புரிந்துணா்வு ஒப்பந்தம்: கேட்டா்பில்லா் நிறுவனத்துக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே ரூ.500 கோடி முதலீட்டு மதிப்பிலான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. திருவள்ளூா், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கட்டுமான கருவிகளை உற்பத்தி செய்யும் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றை விரிவாக்கம் செய்ய இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
இந்த ஒப்பந்தம் பரிமாற்ற நிகழ்வில் கேட்டா்பில்லா் நிறுவனத்தின் இயக்குநா் புவன் அனந்தகிருஷ்ணன், முதுநிலை துணைத் தலைவா் கொ்க் எப்லா் மற்றும் உயா் அலுவலா்கள் பங்கேற்றனா். தமிழக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, துறைச் செயலா் வி.அருண்ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் வே.விஷ்ணு உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...