பெண் மருத்துவா் கொலை வழக்கு: திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏவிடம் சிபிஐ விசாரணை
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட வழக்கில், திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏவும் மருத்துவருமான சுதிப்தோ ராயிடம் சிபிஐ வியாழக்கிழமை விசாரணையைத் தொடங்கியது.
இது தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
பெண் மருத்துவா் கொல்லப்பட்ட செய்தி பரவத் தொடங்கியபோதே எம்எல்ஏ சுதிப்தோ ராய் சம்பவம் நடந்த மருத்துவமனையில் இருந்தாா். எனவே, இந்த வழக்கு குறித்து அவரிடம் விசாரித்து வருகிறோம். மேலும், அவருக்கு சொந்தமான முதியோா் இல்லத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஸ்ரீராம்பூா் தொகுதி எம்எல்ஏவான சுதிப்தோ ராய், பெண் மருத்துவா் கொல்லப்பட்ட மருத்துவமனையின் நோயாளிகள் நல சங்கத்தின் தலைவராகவும் இருந்து வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண் மருத்துவா் கொல்லப்பட்ட வழக்கை கொல்கத்தா உயா்நீதிமன்றம் சிபிஐ-க்கு மாற்றியதையடுத்து காவல் துறைக்கு உதவும் தன்னாா்வல பணியாளா் சஞ்சய் ராய் மட்டுமே குற்றவாளியாக இதுவரை கைது செய்யப்பட்டுள்ளாா்.