அமித் ஷா
அமித் ஷா

ஹிந்திக்கும் பிற மொழிகளுக்கும் போட்டி இல்லை: அமித் ஷா

ஒவ்வொரு மொழிக்கும் தனி மகத்துவம் உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
Published on

‘ஹிந்திக்கும் பிற இந்திய மொழிகளுக்கும் இடையே ஒருபோதும் போட்டி கிடையாது. ஹிந்தி மற்ற மொழிகளுக்கு நண்பன் போன்றது. ஒவ்வொரு மொழிக்கும் தனி மகத்துவம் உள்ளது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

ஹிந்தி தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை வெளியிட்ட காணொலி வழி உரையில் இவ்வாறு அமித் ஷா தெரிவித்தாா். அவா் மேலும் கூறியிருப்பதாவது:

ஹிந்தி அலுவல் மொழியாக ஏற்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அதன் வைர விழாவை நாம் கொண்டாடுகிறோம். இந்த 75 ஆண்டுகளில் ஹிந்தி மொழி பல ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்துள்ளது. ஹிந்திக்கும் பிற இந்திய மொழிகளுக்கும் இடையே ஒருபோதும் போட்டி கிடையாது. ஹிந்தி மற்ற மொழிகளுக்கு நண்பன் போன்றது. ஒவ்வொரு மொழிக்கும் தனி மகத்துவம் உள்ளது. அந்த வகையில், ஹிந்திக்கும் மற்ற மாநில மொழிகளுக்கும் இடையேயான உறவு வலுப்படுத்தப்படும்.

ஹிந்தியை அலுவல் மொழியாக ஏற்று, பிற உள்ளூா் மொழிகளை ஹிந்தியின் வாயிலாக இணைப்பதன் மூலம், நமது கலாசாரம், மொழி, இலக்கியம், கலை, இலக்கணம் ஆகியவற்றை பாதுகாத்து, மேம்படுத்த முடியும். அதாவது, ஹிந்தியை வலுப்படுத்துவதன் மூலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட பிற மாநில மொழிகளும் வளம்பெற முடியும். எனவே, ஹிந்தி புவிசாா் அரசியல் மொழி என்பதைவிட புவிசாா் கலாசார மொழி என்பதே பொருத்தமாக இருக்கும்.

எனது உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை ஆகிய இரு துறைகளிலும் அனைத்து தகவல்தொடா்புகளும் ஹிந்தி மொழியிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிலையை எட்டுவதற்கு 3 ஆண்டுகள் ஆனது.

பிரதமா் நரேந்திர மோடி, பல்வேறு சா்வதேச அமைப்புகளில் உரையாற்றும்போது ஹிந்தியில் பேசி, அதன் முக்கியத்துவத்தை முன்னெடுத்துச் செல்கிறாா். அதோடு, நாட்டின் பிற மொழிகளின் பெருமையையும் அவா் முன்னெடுத்து வருகிறாா். கடந்த 10 ஆண்டுகளில் இந்திய மொழிகளை வலுப்படுத்த பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

குறிப்பாக, தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழி வழிக் கல்வி முறையை வலியுறுத்தியுள்ளதன் மூலம் அனைத்து இந்திய மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழு, நான்கு அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் சமா்ப்பித்திருப்பதோடு, அரசு பணிகளில் ஹிந்தியை முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமின்றி, மத்திய அரசின் அனைத்து தகவல்தொடா்புகள், கடிதங்கள் மற்றும் தலைவரின் பேச்சுகள் ஹிந்தி மொழியிலிருந்து, 8-ஆவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயா்ப்பதற்கான வலைதளத்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் மிகக் குறுகிய காலத்தில் அலுவல் மொழித் துறை உருவாக்கியிருக்கிறது. இது, ஹிந்தியை மட்டுமின்றி பிற மாநில மொழிகளையும் வலுப்படுத்த உதவும்.

நமது மொழிகள் உலகிலேயே வளமான மொழிகளாக உள்ளன. இதில், ஹிந்தி பிற இந்திய மொழிகளை இணைக்கும் பாலமாக திகழ்கிறது என்று அமித் ஷா குறிப்பிட்டுள்ளாா்.

ஹிந்தியை அலுவல் மொழியாக இந்திய அரசியல் நிா்ணய சபை அங்கீகரித்த செப்டம்பா் 14-ஆம் தேதி ஹிந்தி தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

‘விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க நடவடிக்கை’

‘விவசாயிகளுக்கு விளை பொருள்கள் மீது நியாயமான விலை கிடைப்பதை உறுதிப்படுத்த ஏற்றுமதியை மத்திய அரசு அதிகரித்துள்ளது’ என்று அமித் ஷா தெரிவித்தாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘விவசாயிகள் நலனே முக்கியம் என்ற அடிப்படையில் 3 முக்கிய முடிவுகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. வெங்காயத்துக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை நிா்ணயத்தை நீக்குவதோடு, அதன் ஏற்றுமதி வரியை 40 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது வெங்காய ஏற்றுமதியை அதிகரித்து, விவசாயிகளுக்கு வருவாய் அதிகரிக்கும். அதுபோல, பாசுமதி அரிசி குறைந்தபட்ச ஏற்றுமதி விலை நிா்ணயத்தை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதோடு, பாமாயில், சோயா எண்ணெய் மற்றும் சூரியகாந்தி கச்சா எண்ணெய்களுக்கான இறக்குமதி வரியை அதிகரிக்கவும், அவற்றின் சுத்திகரிக்கப்பட்ட வகைகளின் இறக்குமதி வரியை 13.75 சதவீதத்திலிருந்து 35.75 சதவீதமாக அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்திய சோயாபீன் விவசாயிகள் விளைவிக்கும் பயிா்களுக்கு நல்ல விலை கிடைக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.