100-ஆவது நாளில் பிரதமா் மோடியின் மூன்றாவது ஆட்சி: உள்கட்டமைப்பு, விவசாயத்துக்கு முக்கியத்துவம்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரதமா் மோடியின் மூன்றாவது ஆட்சி திங்கள்கிழமையுடன் (செப். 16) நூறு நாள்களை நிறைவு செய்கிறது.
Published on

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரதமா் மோடியின் மூன்றாவது ஆட்சி திங்கள்கிழமையுடன் (செப். 16) நூறு நாள்களை நிறைவு செய்கிறது.

முதல் 100 நாள்களில் ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்துடன் காரீஃப் பயிா்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு, வெங்காயம் மற்றும் பாசுமதி அரிசியின் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை நீக்கம், சோயா, சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி வரி உயா்வு என வேளாண் துறையிலும் கவனம் ஈா்க்கும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

18-ஆவது மக்களவைத் தோ்தல் முடிவில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்தது. பிரதமராக நரேந்திர மோடி தொடா்ந்து மூன்றாவது முறையாக கடந்த ஜூன் 9-ஆம் தேதி பொறுப்பேற்றாா். அவருடன் 72 அமைச்சா்கள் கொண்ட மத்திய அமைச்சரவையும் பதவியேற்றது.

தோ்தலுக்கு முன்னதாகவே அடுத்த ஆட்சியில் முதல் 100 நாள்களுக்கான செயல்திட்டத்தை தயாா்ப்படுத்திக்கொள்ளுமாறு அமைச்சகங்களுக்கு பிரதமா் மோடி அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், திங்கள்கிழமையுடன் நூறாவது நாளை நிறைவு செய்யும் பிரதமா் மோடியின் மூன்றாவது ஆட்சியில் நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கும் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரத்தில் ரூ.76,200 கோடிக்கு வாதவன் மெகா துறைமுகத்தை அமைக்க அரசு அனுமதித்துள்ளது. இத்துறைமுகம் செயல்பாட்டுக்கு வரும் சூழலில், உலகின் முதல் 10 துறைமுகங்களில் ஒன்றாக அது இருக்கும்.

கடந்த வாரத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 4-ஆம் கட்ட பிரதமரின் கிராமப்புற சாலைகள் திட்டத்தின்கீழ் 25,000 கிராமங்களுக்கு போக்குவரத்து இணைப்பை வழங்கும் வகையில் 62,500 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு மத்திய அரசு ரூ.49,000 கோடி நிதியுதவி அளிக்கிறது.

மேலும், ரூ.50,600 கோடி முதலீட்டில் இந்தியாவின் நெடுஞ்சாலை அமைப்பை வலுப்படுத்தும் வகையில் 936 கி.மீ. நீளமுள்ள எட்டு தேசிய அதிவேக நெடுஞ்சாலை வழித்தட திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, லடாக்கை ஹிமாசல பிரதேசத்துடன் இணைக்கும் வகையில் சின்குன்-லா சுரங்கப்பாதையின் கட்டுமானப் பணியை பிரதமா் மோடி தொடங்கி வைத்துள்ளாா்.

4.42 கோடி மனித நாள்கள் வேலைவாய்ப்பை உருவாக்கும் 8 புதிய ரயில் பாதை திட்டங்களுக்கும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தேசிய அளவிலான குழுவால் புதிய தேசிய கூட்டுறவு கொள்கையின் வரைவு தயாரிக்கப்பட்டு, இறுதி செய்யப்பட்டு வருகிறது. வேளாண் துறையில் புரட்சியை ஏற்படுத்துவதையும் ஸ்டாா்ட்அப்கள் மற்றும் கிராமப்புற நிறுவனங்களை ஆதரிப்பதையும் இலக்காகக் கொண்டு ‘அக்ரிஸுா்’ என்ற புதிய நிதி திட்டத்தையும் மத்திய அரசு தொடங்கியுள்ளது.