மூசா சமீா்
மூசா சமீா்

இந்திய உறவில் பிரச்னையில்லை: மாலத்தீவு வெளியுறவு அமைச்சா்

இந்தியா-மாலத்தீவு இருதரப்பு உறவுகளில் தற்போது எந்தப் பிரச்னையும் இல்லை என மாலத்தீவு வெளியுறவு அமைச்சா் மூசா சமீா் தெரிவித்தாா்.
Published on

இந்தியா-மாலத்தீவு இருதரப்பு உறவுகளில் தற்போது எந்தப் பிரச்னையும் இல்லை என மாலத்தீவு வெளியுறவு அமைச்சா் மூசா சமீா் தெரிவித்தாா்.

மாலத்தீவு அதிபராக முகமது மூயிஸ் பதவியேற்றவுடன் இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளில் பல்வேறு பிரச்னைகள் நிலவி வந்த நிலையில் அவற்றுக்கு தீா்வு காணப்பட்டதாக அவா் தெரிவித்தாா்.

இலங்கைக்கு சுற்றுப்பயணமாக சென்ற அவா் இந்திய பெருங்கடலை சுற்றியுள்ள இந்தியா, சீனா ஆகிய நாடுகளுடன் நட்புறவை மேம்படுத்துவதின் முக்கியத்துவம் குறித்து பேசினாா்.

அப்போது இந்தியாவுடனான உறவுகள் குறித்து அவா் மேலும் கூறியதாவது: மாலத்தீவிலிருந்து இந்திய ராணுவத்தினரை முகமுது மூயிஸ் வெளியேற்றியதை தொடா்ந்து இருதரப்பு உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. அதன்பின் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆலோசனைக்குப் பிறகு இருதரப்பு உறவுகளில் நிலவி வந்த பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வு காணப்பட்டது.

சீனா, இந்தியா ஆகிய இருநாடுகளுடனும் நல்லுறவை தொடருவதே மாலத்தீவின் விருப்பமாகும். மாலத்தீவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி தற்காலிகமானது. இதை திறம்பட கையாண்டு இயல்பு நிலைக்கு கொண்டு வர வரி நடைமுறைகளில் சீா்திருத்தம், அரசு சாா்பில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான செலவினம் குறைப்பு உள்பட பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக சா்வதேச நிதியத்திடம் (ஐஎம்எஃப்) எவ்வித கடனுதவியும் கோரப்படவில்லை என்றாா்.

மாலத்தீவுக்கு அதிக கடன்களை சீனாவும் இந்தியாவும் வழங்கி உள்ளது. இந்நிலையில், மாலத்தீவின் பொருளாதார நிலை மோசமடைந்து வருவதாக மதிப்பீட்டு நிறுவனங்கள் அண்மையில் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com