கூகுள்
கூகுள்

ஜி-மெயில் வைத்திருப்பவரா? கூகுள் வெளியிட்டிருக்கும் எச்சரிக்கை

ஜி-மெயில் முகவரி வைத்திருப்பவர்களுக்கு புதிய எச்சரிக்கையை வெளியிட்டிருக்கிறது கூகுள்.
Published on

ஜி-மெயில் முகவரி வைத்திருப்பவர்களுக்கு புதிய எச்சரிக்கையை வெளியிட்டிருக்கிறது கூகுள்.

உலகம் முழுவதும் ஜிமெயில் முகவரியை சுமார் 150 கோடி பயனர்கள் வைத்திருக்கும் நிலையில், தங்களது சர்வரில் இடவசதியை அதிகரிக்கும் வகையில் புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியிருக்கிறது கூகுள்.

செப்டம்பர் 20ஆம் தேதிக்குள் பயன்பாட்டில் இல்லாத மின்னஞ்சல் (இ-மெயில்) முகவரிகள் டெலிட் செய்யப்படலாம் என்று கூகுள் வெளியிட்டிருக்கும் எச்சரிக்கைத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கைத் தகவலின்படி, 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி முதல் பயன்பாட்டில் இல்லாத மின்னஞ்சல் முகவரிகள் டெலிட் செய்யும் பணிகள் தொடங்கப்படலாம்.

அதாவது, கடந்த 2 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத ஜிமெயில் முகவரிகள் நீக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன விதிகள்

அதற்கு சில விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. இது குறித்து கூகுள் தெரிவித்திருப்பதாவது, கடந்த இரண்டு ஆண்டுகளாக, கூகுளின் ஜிமெயிலை ஒரு பயனர், எந்த வகையிலும் பயன்படுத்தவில்லை என்றால், அது நீக்கப்படும்.

அதாவது, ஜிமெயிலை லாக்-இன் செய்யாமலும், ஜிமெயிலில் எந்த வசதியையும் பயன்படுத்தாமலும், கூகுள் கணக்கில் எந்த மெயிலையும் அனுப்பாமல், பெறாமல், அதனை திறக்காமல் இருந்தால், அந்த ஜிமெயில் கணக்கு நிரந்தரமாக நீக்கப்படும்.

ஆனால், இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஒரு ஜிமெயில் முகவரியை ஏதேனும் நிறுவனம் உருவாக்கிக் கொடுத்திருந்தால், அதாவது, பள்ளியில், பணியிடங்களில், இதர தொழில்துறையினருக்கு நிறுவனமே உருவாக்கிக் கொடுக்கும் மின்னஞ்சல்கள் இந்த விதிகளுக்கு உள்பட்டிருந்தாலும் அவை நீக்கப்பட மாட்டாது என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே, ஜிமெயில் நீக்கப்படுவது மற்றும் அதிலிருக்கும் தகவல்களை நாம் இழப்பது போன்ற நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க, ஜிமெயில் பயனர்கள், ஒரு சில நடவடிக்கைகளை மேற்கொண்டாலே போதும் என்றும் வழிகாட்டுகிறது.

அதாவது, ஒருவர் வெகு நாள்களாக பயன்படுத்தாத ஜிமெயில் இருந்து, அது தேவைப்படும் என்றால், அந்த ஜிமெயில்லை லாக் இன் செய்து, சில மின்னஞ்சல்களை திறந்து படித்து, யாருக்காவது அல்லது அவர்களுக்கே ஒரு மின்னஞ்சலை அனுப்பலாம். இதன் மூலம், அந்த மின்னஞ்சல் முகவரி பயன்பாட்டில் இருப்பதாக எடுத்துக்கொள்ளப்படும்.

கூகுள் புகைப்படங்களை பயன்படுத்தும் வகையில், ஒருவர் உங்கள் புகைப்படங்களை கூகுள் போட்டோஸ் மூலம் ஷேர் செய்துகொள்ளலாம். இதுவும், ஒருவரின் ஜிமெயில் முகவரி பயன்பாட்டில் வைத்திருப்பதற்கான உக்தியாக இருக்கும்.

கூகுளின் சமூக வலைத்தளமான யூடியூப்பிலும் நீங்கள் பிசியாக இருப்பதாகக் காட்டும் வகையில், ஒரு ஜிமெயிலை லாக் இன் செய்துவிட்டு, பிறகு யூடியூப்-பில் சென்று சில விடியோக்களை பார்க்கலாம். இதன் மூலம், கூகுளின் சில சேவைகளையும், அந்த மின்னஞ்சலைக் கொண்டு பயன்படுத்துவது உறுதி செய்யப்படும். இதனால், கூகுளின் ரேடாரிலிருந்து உங்கள் மின்னஞ்சல் முகவரி காக்கப்படும்.

மேலும், கூகுள் டிரைவ் அல்லது கூகுள் சர்ச் பயன்பாடும் அவசியம் என்பதால், கூகுள் அக்கவுண்டை ஓபன் செய்ததும், அதிலிருந்து கூகுள் டிரைவ் சென்று அதிலிருக்கும் கோப்புகளைப் பார்க்கலாம்.

ஒருவேளை ஒருவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ஜிமெயில்கள் இருந்தால், அவை அனைத்தும் உங்களுக்குத் தேவை என்றால், அனைத்தையும் லாக்இன் செய்து, மின்னஞ்சலை படிக்க, அனுப்ப வேண்டும். புகைப்படங்கள், யூடியூப், கூகுள் டிரைவ் போன்ற அனைத்தையும் பயன்படுத்திவிடுவது நல்லது.

ஒருவேளை, இதனை செய்யத் தவறிவிட்டால், அந்த ஜிமெயில் கடைசியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றால், நிரந்தரமாக நீக்கப்படும் அபாயம் இருக்கிறது. அதிலிருக்கும் உங்கள் தகவல்களை ஒருபோதும் பெற முடியாது. எனவே, அதிலிருந்து தப்பிக்க, மேற்சொன்ன வழிமுறைகளைப் பயன்படுத்தி, ஜிமெயிலை காப்பாற்றிக்கொள்ளலாம்.

கூகுள் தனது சர்வரில் தேவைப்படும் இடத்தை அதிகரிக்கும் வகையில், பயன்பாட்டில் இல்லாத ஜிமெயில்களை டெலிட் செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதால், ஜிமெயிலை லாக்இன் செய்து அதனை காப்பாற்றிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com