
ஜம்மு-காஷ்மீரில் 2014-ஆம் ஆண்டுக்குப் பின், பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின் நடைபெறும் தேர்தல் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தும், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும் போட்டியிடுகின்றன.
ஸ்ரீநகரில் இன்று(செப்.16) நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் பவன் கேரா வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய வாக்குறுதிகள்,
வேலையில்லா இளைஞர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதந்தோறும் ரூ. 3,500 ஓராண்டுக்கு வழங்கப்படும்
அரசுத் துறைகளில் 1 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் இதற்காக 30 நாள்களுக்குள் அறிவிப்பு வெளியிடப்பட்டு வேலைவாய்ப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும்
மாவட்ட அளவிலான பாசனத் திட்டங்களுக்காக ரூ. 2,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதன்மூலம், விவசாயிகளுக்கு 100 சதவிகித பாசன வசதி அமைத்து தரப்படும்
நிலம் இல்லா விவசாயிகளுக்கு 99 ஆண்டுகளுக்கு நிலம் குத்தகைக்கு விட நடவடிக்கை எடுக்கப்படும்
சொந்தமாக நிலம் இல்லாத விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 4,000 வழங்கப்படும்
ஜம்மு - காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்றதும் 100 நாள்களுக்குள் சிறுபான்மையினருக்கான ஆணையம் உருவாக்கப்படும்
ஆப்பிளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோவுக்கு ரூ. 72 நிர்ணயிக்கப்படும்
அனைத்து வகையான பயிர்களுக்கும் 100 சதவிகித காப்பீடு வழங்கப்படும்
ஜம்மு காஷ்மீரில் உள்ள மக்கள், அரசு வேலைவாய்ப்பு, பாஸ்போர்ட் பெறுவது உள்ளிட்ட அரசு துறைசார் நடைமுறைகளில் சரிபார்ப்பு நடைமுறைகள் எளிமையாக்கப்படும்
குடும்பத் தலைவிகளுக்கு மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 3,000 ஊக்கத் தொகை
சுய உதவிக்குழுக்களுக்கு வட்டியில்லா கடனாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும்
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 25 லட்சம் மருத்துவக் காப்பீடு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்க்கின் வாக்குறுதிப்படி காஷ்மீர் பண்டிட்டுகளுக்கான மறுவாழ்வுத் திட்டம் நிறைவேற்றப்படும்
உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பிடித்துள்ளன.
விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வகுக்கப்பட்டுள்ள காங்கிரஸின் தேர்தல் அறிக்கை நாட்டின் வடகோடியில் உள்ள வாக்காளர்களைக் கவருமா என்பது தேர்தல் முடிவுகளில்தான் தெரியவரும்.
இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரில் முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு வரும் புதன்கிழமை (செப். 18) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதல் கட்ட பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் திங்கள்கிழமை (செப்.16) நிறைவடைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.