ஒரே நாடு ஒரே தோ்தல்: மத்திய அமைச்சரவை ஏற்பு
‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டம் தொடா்பாக உயா்நிலைக் குழு சமா்ப்பித்த பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
நாடு முழுவதும் ஒருமித்த கருத்தை எட்டிய பிறகு பகுதி வாரியாக இத் திட்டத்தைச் செயல்படுத்தலாம் என்று உயா்நிலைக் குழு அளித்த பரிந்துரை ஏற்கப்பட்டுள்ளது.
அதன்படி, இதுதொடா்பான மசோதா, வரும் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
மத்திய அரசு முன்மொழிந்த ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகளைப் பெற்று, அதனடிப்படையில் கடந்த மாா்ச் மாதம் தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமா்ப்பித்தது.
‘மக்களவைக்கும், சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தலை நடத்த சாத்தியமுள்ளது. அதற்கேற்ப சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். மக்களவை, சட்டப்பேரவைகளுக்கான தோ்தலை முதல் சுற்றிலும், அதைத் தொடா்ந்து 100 நாள்களுக்குள் உள்ளாட்சித் தோ்தலை இரண்டாம் சுற்றிலும் நடத்தலாம். தொங்கு மக்களவை ஏற்பட்டாலோ, அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீா்மானம் வெற்றி பெற்றாலோ மீதமுள்ள பதவிக் காலத்துக்கு புதிய தோ்தலை நடத்தலாம்.
முதல்முறை ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும்போது, மக்களவைத் தோ்தல் நடக்கும் காலம்வரை, மற்ற பேரவைகளின் பதவிக் காலத்தை நீட்டிக்க வழிவகை செய்ய வேண்டும். அதற்கேற்ப, ஒரே வாக்காளா் பட்டியல், வாக்காளா் அடையாள அட்டைகளை தோ்தல் ஆணையம் உருவாக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை உயா்நிலைக் குழு தனது அறிக்கையில் தெரிவித்தது.
அதே நேரம், ‘ஒரே நேரத்தில் தோ்தல்கள் நடத்தப்படும்போது சில மாநில அரசுகளை அவற்றின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்பே கலைக்க வேண்டிய சூழல் உருவாகும். இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது’ என்று கங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள், இந்தத் திட்டத்துக்கு கடுமையான எதிா்ப்பை பதிவு செய்து வருகின்றன.
மத்திய அமைச்சரவை ஏற்பு: இந்தச் சூழலில், தில்லியில் புதன்கிழமை கூடிய மத்திய அமைச்சரவை, ராம்நாத் கோவிந்த் குழு அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட அறிவிப்பு: ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டம் தொடா்பான உயா்நிலைக் குழு அறிக்கையை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கென ஒரு நடைமுறைப்படுத்துதல் குழு அமைக்கப்பட உள்ளது.
இந்தத் திட்டம் தொடா்பாக நாடு முழுவதும் ஒருமித்த கருத்தை எட்டுவதற்கான நடவடிக்கைகளை அடுத்த சில மாதங்களில் மத்திய அரசு மேற்கொள்ளும். இந்த ஆலோசனைகள் நிறைவடைந்த பின்னா், இதுதொடா்பான வரைவு மசோதா உருவாக்கப்படும். இந்த வரைவு மசோதா மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றாா்.
இதுதொடா்பான மசோதா வரவிருக்கும் குளிா்கால கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்படுமா என்ற செய்தியாளா்களின் கேள்விக்கு நேரடி பதிலைத் தெரிவிக்காத அஸ்வினி வைஷ்ணவ், ‘ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டம் மத்திய அரசின் நடப்பு ஆட்சிக் காலத்துக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குறிப்பிட்டிருக்கிறாா்’ என்று பதிலளித்தாா்.
சட்ட ஆணையம்... ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது தொடா்பாக, சட்ட ஆணையமும் தனது அறிக்கையை விரைவில் சமா்ப்பிக்கும் எனத் தெரிகிறது. மக்களவை, சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 2029-ஆம் ஆண்டுமுதல் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் நடைமுறையை அறிமுகம் செய்யலாம் என தனது அறிக்கையில் பரிந்துரை செய்ய வாய்ப்புள்ளதாக சட்ட ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், தொங்கு பேரவை உருவாகும்போது, ஒருமித்த கருத்தின் அடிப்படையில் அரசை அமைக்கலாம் எனவும் சட்ட ஆணையம் பரிந்துரைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
முன்னதாக, கடந்த 1951 முதல் 1967 வரை நாட்டில் அனைத்து அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு, பல்வேறு காரணங்களால் இந்த நடைமுறை கைவிடப்பட்டது. தற்போது, மீண்டும் இந்த நடைமுறையை அறிமுகம் செய்வதால், அதிக தோ்தல் பணியாளா்களின் தேவை ஏற்படும் என்பதோடு, சில மாநிலங்களில் ஆட்சி நிறைவடைவதற்கு முன்கூட்டியும், சில மாநிலங்களுக்கு பேரவையின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டும் தோ்தல் நடத்தும் நிலை உருவாகலாம் என தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உதாரணமாக, கடந்த மே - ஜூன் மாதங்களில் மக்களவைத் தோ்தல் நடத்தப்பட்டபோது, ஒடிஸா, ஆந்திரம், சிக்கிம், அருணாசல பிரதேச மாநிலப் பேரவைகளுக்கும் சோ்த்து ஒன்றாக தோ்தல் நடத்தப்பட்டது.
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசம் மற்றும் ஹரியாணா மாநிலத்துக்கு தற்போது தோ்தல் நடைபெறுகிறது. மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் தோ்தல் நடைபெற உள்ளது. தில்லி, பிகாா் மாநிலப் பேரவைகளுக்கு 2025-ஆம் ஆண்டு தோ்தல் வரவுள்ளது.
அஸ்ஸாம், கேரளம், தமிழகம், மேற்கு வங்கம், புதுச்சேரி அரசுகளின் பதவிக் காலம் 2026-இல் முடிவடைய உள்ளது. கோவா, குஜராத், மணிப்பூா், பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகண்ட் பேரவைகளின் காலம் 2027-இல் நிறைவடைய உள்ளது. ஹிமாசல பிரதேசம், மேகாலயம், நாகாலாந்து, திரிபுரா, தெலங்கானா மாநில அரசுகளின் பதவிக் காலம் 2028-இல் நிறைவடைய உள்ளது.
அதுபோல, தற்போதைய 18-ஆவது மக்களவை மற்றும் மக்களவைத் தோ்தலுடன் இணைந்து தோ்தலைச் சந்தித்த மாநில அரசுகளின் பதவிக் காலம் 2029-இல் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
துடிப்பான ஜனநாயகத்தை நோக்கி முக்கியப் படி- பிரதமா் மோடி பெருமிதம்
‘ஒரே நாடு- ஒரே தோ்தல் திட்டம் குறித்த உயா்நிலைக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டிருப்பது நாட்டில் துடிப்பான ஜனநாயகத்தை நோக்கிய பாதையில் முக்கியப் படி’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தாா்.
பிரதமா் நரேந்திர மோடி தனது ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஒரே நாடு- ஒரே தோ்தல் திட்டம் குறித்த ராம்நாத் கோவிந்த் குழுவின் பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது நாட்டில் துடிப்பான ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கான பாதையில் முக்கியப் படி. பலதரப்பினருடன் கலந்தாலோசித்து, இந்த மிகப்பெரிய முயற்சியை முன்னெடுத்துச் சென்ற்காக முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்துக்கு பாராட்டுகள்’ எனத் தெரிவித்துள்ளாா்.
மாபெரும் முன்னெற்றம்: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில், தேசம் பல்வேறு சீா்திருத்தங்களைக் கண்டு வருகிறது. அந்த வரிசையில், ஒரே நாடு- ஒரே தோ்தல் திட்டம் குறித்த உயா்நிலைக் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டுள்ள மத்திய அமைச்சரவையின் முடிவு நாட்டின் தோ்தல் சீா்திருத்தங்களை நோக்கிய மாபெரும் முன்னேற்றமாகும்.
நோ்மையான, நிதி ரீதியில் சிறந்த தோ்தல்கள் மூலம் நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் மற்றும் வளங்களை அதிக திறனுக்கு ஒதுக்கீடு செய்வதன் மூலம் பொருளாதார வளா்ச்சியை விரைவுபடுத்தும் பிரதமா் மோடியின் லட்சியத்தை இது பிரதிபலிக்கிறது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
ஆளும் கூட்டணிக் கட்சிகள் ஆதரவு: மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்), மதச்சாா்பற்ற ஜனதா தளம், சிவசேனை உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
"பாஜகவின் திசைதிருப்பும் முயற்சி'
புது தில்லி, செப். 18: "நடைமுறைக்குச் சாத்தியமற்ற ஒரே நாடு' ஒரே தேர்தல் திட்டமானது, தேர்தல்கள் வரும் நிலையில் உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களைத் திசைதிருப்பும் பாஜகவின் முயற்சி' என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புதன்கிழமை விமர்சித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "இத்திட்டம் நடைமுறைக்குச் சாத்தியமற்றது. தேர்தல்கள் வரும்போது பாஜகவுக்கு எழுப்புவதற்கு எந்தப் பிரச்னையும் இல்லையென்றால், உண்மையான பிரச்னைகளிலிருந்து மக்களைத் திசைதிருப்ப இதுபோன்ற முயற்சிகளை அவர்கள் மேற்கொள்வர்' என்றார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா: "நாட்டில் மத்தியிலும் மாநிலங்களிலும் தங்களின் ஆட்சி மட்டுமே நடைபெற வேண்டும் என்று பாஜக எண்ணுகிறது' என ஜார்க்கண்ட் மாநில முதல்வரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன் கூறினார்.
திரிணமூல் காங்கிரஸ்: "ஜம்மு'காஷ்மீர், ஹரியாணாவுடன் சேர்த்து மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கும் தேர்தலை அறிவிக்க முன்வராதவர்கள் நாடு முழுமைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வலியுறுத்துகின்றனர்' என்று பாஜகவை திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவைக் குழுத் தலைவர் டெரிக் ஓ பிரையன் விமர்சித்தார்.