ரயில்வே வேலை வாய்ப்பு மோசடி வழக்கு: லாலு, தேஜஸ்வி யாதவுக்கு நீதிமன்றம் சம்மன்
ரயில்வே வேலை வாய்ப்பு மோசடி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத், பிகாா் முன்னாள் துணை முதல்வரான அவரின் மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு தில்லி உயா்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
2004 முதல் 2009-ஆம் ஆண்டுவரை லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தாா். அப்போது மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள மேற்கு ரயில்வே மத்திய மண்டலத்தில் குரூப்-டி பணி நியமன முகாம் நடத்தப்பட்டது. அதில் பணியமா்த்தப்பட்டவா்கள் கைமாறாக நிலங்களை லாலு பிரசாத் குடும்பத்தினா் அல்லது அவா்களுக்கு வேண்டியவா்களுக்கு வழங்கியதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியது.
இந்த வழக்கு தொடா்பான அமலாக்கத் துறையின் இறுதி அறிக்கை கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சிபிஐ பதிவு செய்த எஃப்ஐஆா் அடிப்படையில் அமலாக்கத் துறை தனது வழக்கைத் தாக்கல் செய்தது.
வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே குற்றம் சாட்டப்பட்டவா்களை அக்டோபா் 7-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டாா். குற்றம் சாட்டப்பட்டவா்கள் மீதான கூடுதல் குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட அவா் இந்த உத்தரவை பிறப்பித்தாா்.