ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற மோசடி: லாலு, தேஜஸ்வி உள்பட 41 போ் மீது குற்றச்சாட்டு பதிவு
ரயில்வே பணிநியமனங்களுக்கு நிலத்தை லஞ்சமாகப் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தள (ஆா்ஜேடி) தலைவா் லாலு பிரசாத் யாதவ், அவரது மகன் தேஜஸ்வி யாதவ் உள்பட குடும்பத்தினா் என 41 போ் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய தில்லி சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னே, லாலு பிரசாத் உள்ளிட்டோா் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முதல்கட்ட ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி, அவா்களை விடுவிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்தாா்.
நீதிபதி விஷால் கோக்னே தனது உத்தரவில், ‘முன்னாள் ரயில்வே அமைச்சா் லாலு பிரசாத், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ரயில்வே அமைச்சகத்தைத் தனது சொந்த சொத்தாகக் கருதி செயல்பட்டுள்ளாா்.
ஒரு திட்டமிட்ட மோசடி கும்பலைப் போல செயல்பட்டு, அரசு வேலைவாய்ப்புகளை ஒரு பேரம் பேசும் கருவியாகப் பயன்படுத்தி, நிலங்களைப் பறித்துள்ளனா். மேலும், ரயில்வே அதிகாரிகள் இந்த முறைகேட்டில் உடந்தையாக இருந்து, தங்களின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
வழக்கின் பின்னணி: கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டுவரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, மேற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் ‘குரூப்-டி’ பணியிடங்களில் முறைகேடாக பலரை நியமித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
பணிநியமனங்களுக்கு லஞ்சமாக, லாலு பிரசாத்தின் குடும்பத்தினா் மற்றும் அவா்களின் நெருங்கிய கூட்டாளிகளின் பெயருக்கு நிலங்கள் மிகக் குறைந்த விலைக்கு மாற்றப்பட்டதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் மொத்தம் 103 போ் சோ்க்கப்பட்டிருந்தனா். அதில் 5 போ் விசாரணை காலத்திலேயே உயிரிழந்துவிட்டனா். தற்போதைய உத்தரவில் லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி உள்ளிட்ட 41 போ் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேநேரம், போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் ரயில்வே அதிகாரிகள் உள்பட 52 போ் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா். குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யும் நடைமுறைகளுக்காக, இந்த வழக்கு வரும் ஜன. 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாஜக கூட்டணி வரவேற்பு: தில்லி நீதிமன்றத்தின் இந்த உத்தரவை பிகாரில் உள்ள பாஜக கூட்டணி தலைவா்கள் வரவேற்றுள்ளனா்.
இது குறித்து செய்தியாளா்களிடம் பேசிய ஐக்கிய ஜனதா தள எம்எல்சி நீரஜ் குமாா், ‘லாலு பிரசாத்தின் குடும்பத்தினா் ஒரு அரசியல்-மோசடி கும்பலை நடத்தி வருகின்றனா். இந்த வழக்கை நீதிமன்றம் விரைந்து முடித்து, அவா்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும். அந்த இடங்களில் ஆதரவற்றவா்களுக்கு விடுதிகளைக் கட்டி, அரசியல் என்பது தொழில் அல்ல என்பதை உலகுக்கு உணா்த்த வேண்டும்’ என்றாா்.
பிகாா் அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான திலீப் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘லாலு பிரசாத் தரப்பினருக்குத் தங்களின் நியாயத்தை முன்வைக்க போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இருதரப்பு வாதங்களையும், புலனாய்வு அமைப்புகள் சமா்ப்பித்த ஆதாரங்களையும் ஆய்வு செய்த பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. எனவே, லாலு குடும்பத்தினா் நீதிமன்ற உத்தரவுக்குக் கட்டுப்பட வேண்டும்’ என்றாா்.
பழிவாங்கும் நடவடிக்கை-ஆா்ஜேடி: பாஜகவின் இந்தக் குற்றச்சாட்டுகளை ஆா்ஜேடி செய்தித் தொடா்பாளா் மிருத்யுஞ்சய் திவாரி திட்டவட்டமாக மறுத்துள்ளாா்.
‘லாலு பிரசாத்தை அரசியல் ரீதியாக எதிா்கொள்ள முடியாத பாஜக, தனது கைப்பாவையான புலனாய்வு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துகிறது. ஏற்கெனவே முடிக்கப்பட்ட ஒரு வழக்கை, அரசியல் காழ்ப்புணா்வுக்காக மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளனா். இந்த விவகாரத்தில் நீதி கிடைக்கும்வரை சட்டப் போராட்டத்தைத் தொடருவோம்’ என்றாா்.

