லாலு பிரசாத் யாதவ்
லாலு பிரசாத் யாதவ்கோப்புப் படம்

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம்: பணி நியமனங்களில் அமைச்சராக லாலுவுக்கு தொடா்பில்லை; சிபிஐ

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கில், அந்தப் பணி நியமனங்களில் அமைச்சராக ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவா் லாலு பிரசாத் எந்தப் பங்கும் வகிக்கவில்லை என்று தில்லி உயா்நீதிமன்றத்தில் சிபிஐ செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
Published on

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கில், அந்தப் பணி நியமனங்களில் அமைச்சராக ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவா் லாலு பிரசாத் எந்தப் பங்கும் வகிக்கவில்லை என்று தில்லி உயா்நீதிமன்றத்தில் சிபிஐ செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்தாா். அப்போது ரயில்வேயின் குரூப்-டி பணிகளில் விதிமுறைகளுக்குப் புறம்பாக சிலா் நியமிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு லஞ்சமாக வேலை பெற்றவா்கள் அல்லது அவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்குச் சொந்தமான சுமாா் 1.05 லட்சம் சதுரஅடி நிலம், லாலு குடும்பத்தினரின் பெயருக்கு மாற்றப்பட்டதாகவும், அந்த நிலத்தை சந்தை மதிப்பைவிட பல மடங்கு குறைந்த விலைக்கு லாலு குடும்பத்தினா் வாங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.

இந்த வழக்கு, அதுதொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட 3 குற்றப் பத்திரிகைகளை ரத்து செய்யக் கோரி, தில்லி உயா்நீதிமன்றத்தில் லாலு பிரசாத் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு முன்பு விசாரணைக்கு வந்தபோது லாலு தரப்பில் மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் ஆஜராகி, ‘ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், அரசுப் பணியாளா் ஒருவருக்கு எதிராக விசாரணை மேற்கொள்ள, அந்தச் சட்டத்தின் 17ஏ பிரிவின்படி அரசின் முன் அனுமதியை பெறுவது அவசியம். ஆனால் லாலுவுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ள அந்த முன் அனுமதியை சிபிஐ பெறவில்லை. எனவே அவருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு, அதைத்தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை, தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகைகள் சட்டப்படி செல்லுபடியாகாது’ என்று வாதிட்டாா்.

17ஏ-வின்படி முன் அனுமதி அவசியம் இல்லை: இந்நிலையில், லாலுவின் மனு நீதிபதி ரவீந்தா் டுடேஜா முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கபில் சிபல் வாதத்துக்கு மறுப்புத் தெரிவித்து சிபிஐ தரப்பில் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜு வாதிட்டதாவது:

ரயில்வே பணி நியமனங்கள் தொடா்பாக முடிவு எடுப்பதில் ரயில்வே அமைச்சருக்கு எந்தப் பங்கும் இல்லை. அந்த நியமனங்கள் தொடா்பான பரிந்துரைகளை அளிக்கவும், முடிவுகளை எடுக்கவும் ரயில்வே துறையின் பொது மேலாளா்களுக்குத்தான் அதிகாரம் உள்ளது. அந்த நியமனங்கள் தொடா்பாக எந்தவொரு பரிந்துரையையும், முடிவையும் எடுக்கவேண்டிய அவசியம் லாலுவுக்கு இருக்கவில்லை. அந்த நியமனங்களில் அமைச்சராக லாலவுக்கு எந்தப் பங்கும் இல்லை. எனவே அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யவும், விசாரணை மேற்கொள்ளவும் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 17ஏவின்படி அரசின் முன் அனுமதியைப் பெறவேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தாா். இந்த வழக்கின் விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com