

ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்ச வழக்கு: ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாகப் பெற்ற வழக்கில், ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர், முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிறர் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யுமாறு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே, லாலு யாதவ் ரயில்வே அமைச்சகத்தைத் தனது தனிப்பட்ட விஷயத்துக்காகப் பயன்படுத்தி, குற்றச் செயலைச் செய்ததாகவும், அதில் ரயில்வே அதிகாரிகள் மற்றும் அவரது நெருங்கிய உதவியாளர்களுடன் சேர்ந்து யாதவ் குடும்பத்தினர் நிலங்களை வாங்குவதற்காக பொதுத்துறை வேலைகளைப் பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது.
உத்தரவின் முக்கியப் பகுதியை வாய்மொழியாக அறிவித்த நீதிபதி, சிபிஐயின் இறுதி அறிக்கை சந்தேகத்தின் அடிப்படையில் பெரிய சதியை வெளிப்படுத்துவாகக் கூறினார்.
அதோடு, லாலு பிரசாத், அவரது குடும்ப உறுப்பினர்கள் உள்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவையும் அவர் நிராகரித்தார். ரயில்வே நிலங்களைக் கைப்பற்றக் குற்றக் கும்பலாகச் செயல்பட்டதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த வழக்கில் 41 பேர் மீது நீதிமன்றம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ததுடன், 52 பேரை விடுவித்தது. விடுவிக்கப்பட்டவர்களில் ரயில்வே அதிகாரிகள் மற்றும் தங்களது நிலங்களை விட்டுக்கொடுக்காத மாற்றுப் பணியாளர்களும் அடங்குவர்.
முன்னதாக, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் நிலை குறித்த சரிபார்ப்பு அறிக்கையை சிபிஐ சமர்ப்பித்திருந்தது. அதன் குற்றப்பத்திரிகையில் பெயரிடப்பட்ட 103 பேரில் ஐந்து பேர் இறந்துவிட்டதாக அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை முறைப்படி பதிவு செய்வதற்காக ஜனவரி 23-ஆம் தேதிக்கு இந்த வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.