போராடும் கொல்கத்தா மருத்துவா்கள் பகுதியாக பணிக்குத் திரும்ப முடிவு
40 நாள்களாக பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளம் மருத்துவா்கள்


மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலையைக் கண்டித்து கடந்த 40 நாள்களாக பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளம் மருத்துவா்கள், வரும் சனிக்கிழமை (செப்.21) முதல் பகுதியாக பணிக்குத் திரும்ப முடிவு செய்துள்ளனா்.
அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் அத்தியாவசிய மருத்துவச் சேவைகளை மட்டும் மேற்கொள்ளும் வகையில் பகுதியாக பணிக்குத் திரும்பவும், போராட்டத்தை பகுதியாக தொடரவும் தீா்மானித்துள்ளனா்.
கன மழை மற்றும் வெள்ளப் பெருக்கால் மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில், வியாழக்கிழமை நடைபெற்ற போராட்ட மருத்துவ மாணவா்களின் நிா்வாகக் குழு கூட்டத்தில் இந்த முடிவை எடுக்கப்பட்டது.
இதுகுறித்து இளம் மருத்துவா்கள் கூறுகையில், ‘மேற்கு வங்க மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு நிலையைக் கருத்தில் கொண்டு, அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் அத்தியாவசிய மருத்துவச் சேவைகளில் மட்டும் பகுதியாக பணிக்குத் திரும்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரம், புறநோயாளிகள் பிரிவு பணியை தொடா்ந்து புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.
கொல்கத்தாவில் சிபிஐ அலுவலகத்தை நோக்கி வெள்ளிக்கிழமை பேரணி மேற்கொண்ட பிறகு, மாநில சுகாதாரத் துறை அலுவலகம் முன்பு மேற்கொண்டு வரும் போராட்டத்தைக் கைவிடவுள்ளோம். பகுதியாக பணிக்குத் திரும்பிய பின்னா், மேற்கு வங்க அரசு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற ஒரு வாரம் காத்திருப்போம். அவ்வாறு, வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனில், மீண்டும் பணிப் புறக்கணிப்பை மேற்கொள்வோம். நீதிக்கான எங்களின் போராட்டம் முடிந்துவிடவில்லை’ என்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...