பிரதமர் மோடி மகாராஷ்டிரத்திற்கு இன்று செல்லவுள்ள நிலையில், அவரிடம் 3 கேள்விகள் கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், தனது எக்ஸ் பக்கத்தில், ``உயிரியல் அல்லாத பிரதமர் பதிலளிக்க வேண்டிய 3 கேள்விகள்:
விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுக்க பாஜக என்ன செய்கிறது?
மகாராஷ்டிரத்தில் சராசரியாக ஒரு நாளில் 7 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். கடந்தாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையில் 2,366 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக, மாநில நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்த புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.
கடந்தாண்டு 60 சதவிகிதம் மாவட்டங்கள் வறட்சியை எதிர்கொண்டன; ஆனால், அரசு எந்த உதவியும் வழங்கவில்லை. மாநிலத்தில் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் பருவமழையால் பயிர்கள் சேதமடைந்தபோது, விவசாயிகளின் கடன் தள்ளுபடி நீட்டிக்கப்பட்டது. ஆனால், மென்பொருள் குறைபாடுகள் காரணமாக 6.56 லட்சம் விவசாயிகள், நிவாரணத்தை இழந்தனர்.
விவசாயக் கடன்களை சுமூகமாக செயல்படுத்த ஒரு நிரந்தர ஆணையத்துடன் தள்ளுபடி செய்வதற்கும், அனைத்து பயிர் காப்பீட்டு உரிமைகோரல்களையும் 30 நாள்களுக்குள் தீர்ப்பதற்கும் காங்கிரஸ் தொடர்ந்து உத்தரவாதம் அளித்துள்ளது.
மகாராஷ்டிரம் மற்றும் இந்தியாவின் விவசாயிகளை ஆதரிப்பதற்கான பாஜகவின் பார்வை என்ன?
ஆதிவாசிகளை பாஜக ஏன் ஏமாற்றுகிறது?
2006 ஆம் ஆண்டில், வன உரிமைகள் சட்டத்தை காங்கிரஸ் நிறைவேற்றியது. ஆதிவாசி மற்றும் வனத்தில் வசிக்கும் சமூகங்களுக்கு தங்கள் சொந்த காடுகளை நிர்வகிப்பதற்கான சட்ட உரிமைகளை வழங்கியது. இதன்மூலம், அவர்கள் சேகரிக்கும் வன விளைபொருட்களிலிருந்து பொருளாதார ரீதியாக பயனடைய முடியும்.
ஆனால், வன உரிமைகள் சட்டத்தை அமல்படுத்துவதை பாஜக அரசு தடுத்துள்ளது. இதனால் மில்லியன் கணக்கான ஆதிவாசிகள் அதன் பலன்களை இழந்துள்ளனர். மேலும், தாக்கல் செய்யப்பட்ட 4,01,046 தனிநபர் உரிமைகோரல்களில் 52 சதவிகிதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன; சமூக உரிமைகளுக்கு தகுதியான 50,045 ச.கி.மீ-ல் 23.5 சதவிகித அளவில் மட்டுமே நில உரிமைகளை விநியோகித்துள்ளன.
மகாராஷ்டிரத்தில் ஆதிவாசி சமூகத்தினருக்கு, அவர்களின் உரிமைகளை வழங்க பாஜக அரசு தவறியது ஏன்?
காந்திக்கும் கோட்சேவுக்கும் இடையில் பிரதமரின் பக்கம்?
ஒரு காலத்தில் மகாத்மா காந்தி வாழ்ந்த நகரம் வர்தா. இன்று பிரதமரின் கட்சியால் மகாத்மாவின் கொள்கைகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. பாஜக தலைவர்கள் சிலர், மகாத்மாவை கேலி செய்துள்ளனர்; மேலும் சிலர், கோட்சே மற்றும் காந்தியை தேர்வு செய்ய முடியவில்லை என்றும் கூறியுள்ளனர்.
வாரணாசியில் உள்ள அகில் பாரத் சர்வ சேவா சங்கம் முதல் குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமம் வரையில், நாடு முழுவதும் உள்ள பல காந்திய நிறுவனங்கள், ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகளால் இடிக்கப்பட்டு கையகப்படுத்தப்படுவதை எதிர்கொண்டன.
இந்த புனிதமான காந்திய நிறுவனத்தை அரசு அடித்து நொறுக்குவதை எதிர்த்து, வாரணாசியில் உள்ள சர்வசேவா சங்கத்தின் துணை அமைப்புகள் 100 நாள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளன.
காந்திக்கும் கோட்சேவுக்கும் இடையே ஒருவரைத் தேர்ந்தெடுத்தால், மோடி எந்தப் பக்கம் நிற்கிறார்?’’ என்று பதிவிட்டுள்ளார்.