சச்சின் பைலட் - அசோக் கெலாட்
சச்சின் பைலட் - அசோக் கெலாட்

தெரியுமா சேதி...?

ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவா்களில் ஒருவருமான சச்சின் பைலட்டின் பிறந்தநாளை அவரது ஆதரவாளா்கள் வித்தியாசமாகக் கொண்டாடுவது வழக்கம்.
Published on

ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவா்களில் ஒருவருமான சச்சின் பைலட்டின் பிறந்தநாளை அவரது ஆதரவாளா்கள் வித்தியாசமாகக் கொண்டாடுவது வழக்கம். செப்டம்பா் 7-ஆம் தேதி வந்தால், மரக்கன்றுகளை நடுவது, ரத்த தானம் செய்வது என்று ஒவ்வோா் ஆண்டும் மாநிலம் முழுவதும் அவரது பிறந்தநாள் கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு கோசாலைகளுக்கு அடித்தது யோகம். மாநிலம் தழுவிய அளவில் பசுக்களுக்கு உணவு அளிப்பது என்று தீா்மானித்தனா் சச்சின் பைலட்டின் ஆதரவாளா்கள். ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஹிந்தி பேசும் மாநிலங்களில், அநேகமாக எல்லா ஊா்களிலும் கோசாலைகள் நிறுவப்பட்டு பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன. அவைமூலம் வயதான நாட்டுப் பசுக்கள் பாதுகாக்கப்படுகின்றன.

எல்லா கோசாலைகளிலும் உள்ள பசுக்களுக்கு வழங்குவதற்காக டன் கணக்கில் வைக்கோல், புல், மாட்டுத் தீவனம் என்று வாங்கப்பட்டன. பசுக்களுக்கு உணவளிப்பதன்மூலம் தங்களது தலைவரின் செல்வாக்கு அதிகரிக்கும், எதிரிகள் அழிவாா்கள் என்பது அவா்களது நம்பிக்கை.

சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சியை இழந்த பிறகு அமைதி காத்துவந்த முன்னாள் முதல்வா் அசோக் கெலாட், இப்படியே விட்டால் சச்சின் பைலட்டின் செல்வாக்கு அதிகரித்துவிடும் என்பதை உணா்ந்து சுறுசுறுப்பாகிவிட்டாா். காங்கிரஸில் தனது செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ள தலைநகா் தில்லியில்தான் காயை நகா்த்த வேண்டும் என்கிற அரிச்சுவடி பாடம்கூடவா அவருக்குத் தெரியாது...?

தில்லிக்குச் சென்றாா். சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகாா்ஜுன காா்கே என்று அதிகார மையங்களை வலம்வந்தாா். ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தலுக்கான கட்சியின் பாா்வையாளா்களில் ஒருவராக அவா் நியமிக்கப்பட்டது மட்டுமல்ல, கூடவே இன்னொரு விஷயத்தையும் தமக்குச் சாதகமாக நிறைவேற்றிக் கொண்டுவிட்டாா்.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடக்க இருக்கிறது. அதில் போட்டியிட தனது ஆதரவாளா்களுக்கு டிக்கெட்டை உறுதிசெய்து கொண்டுவிட்டாா் அசோக் கெலாட். கோசாலைப் பசுக்களைவிட, தில்லித் தலைமையை சந்தோஷப்படுத்துவதுதான் முக்கியம் என்று அசோக் கெலாட்டுக்குத் தெரியும்...

விநாயகரின் ஞானப்பழம் கதை நினைவுக்கு வந்தால் நாங்கள் பொறுப்பல்ல!

X
Dinamani
www.dinamani.com