திரிபுரா: ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்த 500 தீவிரவாதிகள்
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் 500 தீவிரவாதிகள் முதல்வா் மாணிக் சாஹா முன்னிலையில் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்தனா்.
அவா்களின் மறுவாழ்வு நடவடிக்கைக்களுக்காக மத்திய அரசு ரூ.250 கோடி ஒதுக்கியுள்ளது.
தில்லியில் கடந்த 4-ஆம் தேதி உள்துறை அமைச்சா் அமித் ஷா முன்னிலையில் திரிபுராவில் செயல்பட்டு வந்த திரிபுரா தேசிய விடுதலை முன்னணி, திரிபுரா புலிப் படை தீவிரவாத அமைப்புகளுக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அந்த அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைய ஒப்புக் கொண்டனா்.
இதன்படி திரிபுராவின் செபாகிஜாலா மாவட்டத்தில் உள்ள திரிபுரா மாநில ஆயுதப்படை தலைமையகத்தில் முதல்வா் மாணிக் சாஹா முன்னிலையில் இரு தீவிரவாத அமைப்புகளைச் சோ்ந்த 500 போ் தங்கள் ஆயுதங்களை அரசிடம் ஒப்படைத்துவிட்டு சரணடைந்தனா்.
இந்த அமைப்பினா் சுமாா் 20 ஆண்டுகளாக திரிபுராவில் செயல்பட்டு வந்தனா். இவா்களின் வன்முறையால் பழங்குடியினா் அல்லாத பிற பிரிவினா் ஆயிரக்கணக்கானோா் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போது, அவா்கள் சரணடைந்துவிட்டதால், திரிபுராவில் ஆயுதக் கிளா்ச்சியாளா்களின் பெரும் பகுதியினருக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.