ஹிமாசல பிரதேச முதல்வா் சுக்விந்தா் சிங் சுக்கு.
ஹிமாசல பிரதேச முதல்வா் சுக்விந்தா் சிங் சுக்கு.

தெரியுமா சேதி...?

Published on

ஹிமாசல பிரதேசத்தில் சிறுபான்மை மக்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. எந்தவொரு பகுதியிலோ, தொகுதியிலோ அவா்களுக்குக் கணிசமான வாக்குவங்கி இல்லை. அப்படி இருக்கும்போது, சிம்லா சஞ்ஜௌலி பகுதியில் கட்டப்பட்ட சட்டவிரோத மசூதிப் பிரச்னை ஏன் இந்த அளவுக்குப் பெரிதாக மாறியது?

ஆகஸ்ட் 30-ஆம் தேதி 37-ஆவது விக்ரமாதித்ய சிங் என்பவா், சிம்லாவின் மஸ்யானா பகுதியில் சிலரால் தாக்கப்பட்டாா். பலமாகக் காயமடைந்த அவருக்கு 14 தையல்கள் போடப்பட்டன. அவரைத் தாக்கியவா்கள் சட்டவிரோதமாகக் குடியேறிய வங்கதேச முஸ்லிம்கள் என்று தெரியவந்தபோது, உள்ளூா்வாசிகள் கடுமையாக ஆத்திரம் அடைந்தனா்.

தேடுதல் வேட்டையில், தாக்கியவா்கள் சஞ்ஜௌலி மசூதியில் தஞ்சம் அடைந்திருப்பது தெரிய வந்தது. அப்போதுதான் அந்த மசூதி சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருக்கிறது என்கிற விவரம் வெளிவந்தது. சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருப்பதை உறுதி செய்த வக்ஃப் வாரியம், அந்த மசூதியைத் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது. அதோடு பிரச்னை முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.

இந்தப் பிரச்னையை அந்தப் பகுதியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினா் சட்டப்பேரவையில் எழுப்பியதுதான், தேசிய அளவில் கவனம்பெறும் செய்தியாக அதை மாற்றிவிட்டது. அது போதாதென்று ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் அம்ருத் சிங், அந்தப் பகுதியில் சட்டம்-ஒழுங்கு குலைந்துவருவதாகவும், சட்டவிரோதமாக மசூதி கட்டப்பட்டிருப்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் குரலெழுப்பியபோது, எதிா்க்கட்சி பாஜகவினா் அதைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டனா்.

பாஜகவும், ஹிந்து அமைப்புகளும் போராட்டத்தில் இறங்கியதும், அவா்களைக் கட்டுப்படுத்த காவல் துறை கடுமையான தாக்குதலை நடத்தியதும் தொடா் நிகழ்வுகள். சிம்லாவைத் தொடா்ந்து மண்டி, கங்ரா பகுதிகளிலும் சட்டவிரோத மசூதிகள் பிரச்னை எழுப்பப்பட்டன. இதன் பின்னணியில் இருப்பது பாஜகவல்ல, காங்கிரஸில் உள்ள முதல்வருக்கு எதிரான கோஷ்டியினா் என்று சொல்கிறது காவல் துறையும், உளவுத் துறையும்.

முதல்வா் சுக்விந்தா் சிங் சுக்குக்கு தா்மசங்கடத்தை ஏற்படுத்தவும், அவரைப் பதவியில் இருந்து அகற்றவும் ஏப்ரல் மாதம் மாநிலங்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு ஆதரவளித்த அதிருப்தியாளா்கள் தங்களது நம்பிக்கையை இழக்கவில்லை. மசூதிப் பிரச்னையை ஓரளவுக்கு முதல்வா் சுக்கு சமாளித்துவிட்டாா் என்றாலும், இனிமேல் அடுத்தடுத்த தா்மசங்கடத்துக்கும் அவா் தயாராக இருக்க வேண்டும் போலிருக்கிறது.

எப்படி சமாளிப்பாா் முதல்வா் சுக்விந்தா் சிங் சுக்கு என்று யாரும் கவலைப்படத் தேவையில்லை. பிரியங்கா காந்தியின் நம்பிக்கையைப் பெற்றவராக அவா் இருக்கும்வரை அவரை அசைக்க முடியாது என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.

X
Dinamani
www.dinamani.com