மும்பையில் மிக கனமழை பெய்ய அதிகம் வாய்ப்பிருப்பதாக கணித்திருக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம்(ஐஎம்டி) ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்காரணமாக மாநகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழக்கூடுமெனவும், குறிப்பாக, முலுண்ட், பாண்டப், கஞ்சூர்மார்க், போவாய், அந்தேரி ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் 36 - 48 மணி நேரத்தில் 200 மி.மீ.க்கும் மேல் மழைப்பொழிவு பதிவாகக்கூடுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் தேவையில்லாமல் வீடுகளைவிட்டு வெளியே வர வேண்டாமெனவும் பாதுகாப்பாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கல்யாண், பத்லாபூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்துவரும் நிலையில், அப்பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
வானிலை முன்னறிவிப்பின்படி, புதன்கிழமை(இன்று - செப்.25) கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையும், வியாழக்கிழமை(செப்.26) மிக கனமழை முதல் அதீத கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும், அதைத்தொடர்ந்து, வெள்ளிக்கிழமை(செப்.27) கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.