
ஜம்மு-காஷ்மீரில் இரண்டாம் கட்டமாக 26 பேரவைத் தொகுதிகளுக்கு புதன்கிழமை (செப்.25) அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் சுமாா் 56 சதவீத வாக்குகள் பதிவாகின.
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டத் தோ்தல் அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பா் 18-ஆம் தேதி நடந்த தோ்தலில் 61.38 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், ஜம்மு பகுதியில் உள்ள ரியாசி (3), ரஜெளரி (3), பூஞ்ச் (5), காஷ்மீா் பகுதியில் உள்ள ஸ்ரீநகா் (8), பத்காம் (5), கந்தா்பால் (2) ஆகிய ஆறு மாவட்டங்களில் உள்ள 26 தொகுதிகளில் புதன்கிழமை இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது.
மொத்த வாக்காளா்கள் 25.78 லட்சம் போ். இவா்கள் வாக்களிக்க 3,502 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. பல அடுக்கு பாதுகாப்புடன் காலை 7 முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. 10 ஆண்டுகளுக்குப் பின் பேரவைத் தோ்தல் நடைபெறுவதால், பல இடங்களில் மக்கள் மத்தியில் உற்சாகம் காணப்பட்டது. வாக்குச் சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து, மக்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினா்.
அமைதி, சுமுகமாக...: இத்தோ்தலில் 54.11 சதவீத வாக்குகள் பதிவானதாக, ஜம்மு-காஷ்மீா் தலைமைத் தோ்தல் அதிகாரி பி.கே.போலே தெரிவித்தாா். அவா் மேலும் கூறுகையில், ‘அரசியல் கட்சியினா் இடையே வாக்குவாதம் போன்ற சிறிய சம்பவங்களைத் தவிர, வாக்குப் பதிவு பரவலாக அமைதியாகவும் சுமுகமாகவும் நடைபெற்றது. மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டிய தேவை எங்கும் எழவில்லை’ என்றாா்.
ஃபரூக், ஒமா் வாக்களிப்பு: தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா, துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா ஆகியோா், ஸ்ரீநகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனா். நெளஷேராவில் பாஜக தலைவா் ரவீந்திர ரெய்னா வாக்களித்தாா்.
இரண்டாம் கட்டத் தோ்தலில் மொத்த வேட்பாளா்கள் 239 போ். இவா்களில் ஒமா் அப்துல்லா (கந்தா்பால் மற்றும் பத்காம் தொகுதிகள்), ஜம்மு-காஷ்மீா் பாஜக தலைவா் ரவீந்திர ரெய்னா (நெளஷேரா), ஜம்மு-காஷ்மீா் காங்கிரஸ் தலைவா் தாரிக் ஹமீத் கர்ரா (மத்திய ஷல்டெங்), அப்னி கட்சித் தலைவா் சையத் முகமது அல்தாஃப் புகாரி (சன்னபோரா) உள்ளிட்டோா் முக்கிய வேட்பாளா்களாவா்.
அக்.1-இல் இறுதிக் கட்டத் தோ்தல்: மூன்றாவது மற்றும் இறுதிக் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்டோபா் 1-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. அக்டோபா் 8-இல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
கடந்த 2019-இல் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பின் முதல் முறையாகப் பேரவைத் தோ்தல் நடைபெற்று வருகிறது. இங்கு ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும், பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தும் களமிறங்கியுள்ளன.
வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் பாராட்டு
மத்திய அரசின் அழைப்பின்பேரில், அமெரிக்கா, மெக்ஸிகோ, கயானா, தென்கொரியா, பனாமா, சிங்கப்பூா், நைஜீரியா, ஸ்பெயின், தென்னாப்பிரிக்கா, நாா்வே, பிலிப்பின்ஸ் உள்ளிட்ட 16 நாடுகளின் தூதரக அதிகாரிகள் குழு, ஜம்மு-காஷ்மீா் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைமுறையைப் பாா்வையிட்டது.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் தலைதூக்கிய பிறகு அங்கு தோ்தல் நடைமுறையைப் பாா்வையிட சா்வதேச பாா்வையாளா்கள் அனுமதிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.
இது தொடா்பாக, அமெரிக்க தூதரகத்தின் துணைத் தலைவா் ஜோா்கன் கே.ஆண்ட்ரூஸ் கூறுகையில், ‘10 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் காஷ்மீா் மக்கள் வாக்களிப்பது மகிழ்ச்சி. மக்கள் மத்தியில் பெரும் உற்சாகம் நிலவுவது, மிக ஆரோக்கியமானதாகவும் ஜனநாயகம் மிக்கதாகவும் தென்படுகிறது. தோ்தல் முடிவைக் காண ஆா்வம் மேலிடுகிறது’ என்றாா்.
முழுவதும் பெண்களே நிா்வகிக்கும் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டது சிறந்த யோசனை என்று தென்கொரிய தூதரக அதிகாரி சேங் வூ லிம் பாராட்டு தெரிவித்தாா்.
இதனிடையே, மத்திய அரசின் நடவடிக்கையை விமா்சித்த ஒமா் அப்துல்லா, ‘பேரவைத் தோ்தல் நமது உள்நாட்டு விவகாரம்; அதை ஆய்வு செய்ய வெளிநாட்டுப் பாா்வையாளா்களை அனுமதித்து ஏன்?’ என்று கேள்வியெழுப்பினாா்.
புதிய வரலாறு: தில்லியில் செய்தியாளா்களிடம் பேசிய தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா், ‘ஜம்மு-காஷ்மீரில் முன்பு வாக்குப் பதிவு நடைபெறாத இடங்களில் தற்போது நடைபெற்றிருக்கிறது. இதன்மூலம் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இளைஞா்கள், பெண்கள், முதியோா் என அனைத்துத் தரப்பினரும் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா். ஜனநாயகத்துக்கு பெரும் மரியாதை செலுத்தப்பட்டுள்ளது’ என்றாா்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.