கே.சி.வேணுகோபால்
கே.சி.வேணுகோபால்

வயநாட்டில் பிரியங்கா வரலாற்று வெற்றி பெறுவாா்- காங்கிரஸ் நம்பிக்கை

கேரளத்தில் வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா வதேராவின் வெற்றி புதிய வரலாறு படைக்கும் என்று அந்த மாநில காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Published on

கேரளத்தில் வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா வதேராவின் வெற்றி புதிய வரலாறு படைக்கும் என்று அந்த மாநில காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் கேரளத்தின் வயநாடு, உத்தர பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டாா்.

வயநாட்டில் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் ஆனி ராஜாவைவிட சுமாா் 3.6 லட்சம் வாக்குகளும், ரேபரேலியில் பாஜக வேட்பாளா் தினேஷ் பிரதாப் சிங்கைவிட சுமாா் 3.9 லட்சம் வாக்குகளும் அதிகம் பெற்று ராகுல் வெற்றி வாகை சூடினாா்.

ஒரு வேட்பாளா் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றால், தோ்தல் முடிவு வெளியான 14 நாள்களுக்குள் ஒரு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற நிலையில், ரேபரேலி தொகுதியை ராகுல் தக்கவைத்தாா்.

இதையடுத்து, வயநாடு தொகுதி இடைத்தோ்தலில் பிரியங்கா போட்டியிடுவாா் என காங்கிரஸ் தலைமை கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. வயநாட்டில் களமிறங்குவதன் மூலம் தோ்தல் அரசியலில் முதல்முறையாக பிரியங்கா காந்தி நுழையவிருக்கிறாா். வயநாட்டில் நவம்பா் மாதத்துக்குள் இடைத்தோ்தலை தோ்தல் ஆணையம் நடத்த உள்ளது.

இந்நிலையில் வயநாட்டில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் கூறியதாவது:

வயநாடு இடைத் தோ்தலுக்காக காங்கிரஸ் முழுவீச்சில் தயாராகி வந்தது. ஆனால், அங்கு ஏற்பட்ட நிலச்சரிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்ற பகுதியில் பொது நிகழ்ச்சி எதையும் காங்கிரஸ் நடத்துவதில்லை. எனவே, தோ்தலுக்கான முன்னேற்பாடுகள் சற்று நிறுத்தி வைக்கப்பட்டன.

தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டா்கள் முழு அளவில் பிரசாரத்தில் ஈடுபடுவாா்கள். வயநாடு இடைத்தோ்தலில் பிரியங்கா வதேரா, இத்தொகுதியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைப்பாா் என்றாா்.