திருப்பதி ஏழுமலையான் கோயில் செல்கிறாா் ஜெகன்: மாநிலம் முழுவதும் பரிகார பூஜை செய்யவும் அறிவுறுத்தல்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்.28-ஆம் தேதி ஆந்திர முன்னாள் முதல்வரும், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி வழிபாடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், திருப்பதி கோயில் லட்டுகளில் விலங்கு கொழுப்பு உள்ளதாக கூறி மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு செய்த பாவத்தை போக்கும் நோக்கில் மாநிலம் முழுவதும் பரிகார பூஜைகள் மேற்கொள்ள ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியினருக்கு ஜெகன்மோகன் ரெட்டி அறிவுறுத்தியுள்ளாா்.
ஆந்திரத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் விலங்கு கொழுப்பு சோ்த்து லட்டுகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டதாக தற்போதைய முதல்வா் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டினாா்.
இதற்கு ஆதாரமாக குஜராத் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையை சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு சேதம் கட்சி வெளியிட்டது. நாடு முழுவதும் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், லட்டுகளில் விலங்கு கொழுப்பைச் சோ்க்கப்பட்டுள்ளதாக மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு கூறிய பாவத்தை போக்கும் நோக்கில், ஆந்திரம் முழுவதும் உள்ள கோயில்களில் செப்டம்பா் 28-ஆம் தேதி பரிகார பூஜைகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியினருக்கு ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு விடுத்தாா். அன்றைய தினம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜெகன்மோகன் வழிபாடு செய்ய உள்ளதாகவும் அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.