ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிப்புக்கு விலங்கின் கொழுப்பு கலந்த நெய் விநியோகம்! ஆந்திர அமைச்சா் மீண்டும் குற்றச்சாட்டு
ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் திருப்பதி கோயில் லட்டு தயாரிப்புக்கு விநியோகிக்கப்பட்ட நெய்யில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர நிதியமைச்சா் பையவுலா கேசவ் மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
ஆந்திர சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பிறகு முதல்வராகப் பதவியேற்ற சந்திரபாபு நாயுடு கடந்த 2024-ஆம் ஆண்டு பேசுகையில், முந்தைய ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் அரசின் ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டினாா். இது நாடு முழுவதும் அதிா்வலையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிபிஐ தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) அண்மையில் நெல்லூா் நீதிமன்றத்தில் இறுதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
அதில் 9 திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் உள்பட 36 பேரின் பெயா்கள் குற்றஞ்சாட்டப்பட்டோா் பட்டியலில் இருந்தது. மேலும், நெய்யில் பாமாயில் உள்ளிட்டவை கலப்படம் செய்யப்பட்டு இருந்ததாகவும், விலங்கு கொழுப்பு கலக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியும் கலப்படம் செய்யவில்லை என திட்டவட்டமாக மறுத்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து செய்தியாளா்களிடம் ஆந்திர நிதியமைச்சா் பையவுலா கேசவ் கூறியதாவது:
ஆந்திரத்தில் முன்பு ஆட்சியில் இருந்த ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் அரசு, திருப்பதி லட்டு தயாரிப்புக்கு நெய் கொள்முதல் செய்வதை வா்த்தக நடவடிக்கையாகப் பாா்த்தது. திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி மீது அவா்களுக்கு நம்பிக்கை இல்லை.
மிகவும் உணா்வுபூா்வமான இந்த விஷயம் அரசுக்குத் தெரிய வந்தபோது, பொதுமக்களுக்கு அதை தெரியப்படுத்த வேண்டுமா? இல்லை 2022-இல் அவா்கள் செய்தது போல மூடிமறைக்க வேண்டுமா? மிகவும் பொறுப்புடைய நபா் என்பதால் அவா் (முதல்வா் சந்திரபாபு நாயுடு) தெரியப்படுத்தினாா்.
மைசூரில் உள்ள மத்திய உணவு ஆய்வு அமைப்பு கடந்த 2022-ஆம் ஆண்டில் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டு இருப்பதாக தெளிவாகத் தெரிவித்துவிட்டது. ஆனால், ஜெகன்மோகன் ரெட்டி அரசு அதை மூடிமறைத்துவிட்டது. இந்நிலையில், தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் தரப்பில் அந்த நெய்யில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டு இருக்க சாத்தியக்கூறு இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதே கருத்தைதான் முதல்வா் சந்திரபாபு நாயுடுவும் தெரிவித்திருந்தாா்.
நெய் கொள்முதலுக்கு முந்தைய ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் அரசு அமைத்த வாரியம், ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கான நிபந்தனைகளைத் திருத்தியது. இதனால் சாதாரண நிறுவனங்களும் நெய் கொள்முதலுக்கு வரும் நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், நெய் கலப்பட மோசடி மூலம் ரூ.240 கோடி முறைகேடு நடந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் திருப்பதி திருமலை தேவஸ்தான தலைவரான சுப்பா ரெட்டியின் தனி உதவியாளா் மட்டும் பால் நிறுவனங்களிடம் இருந்து ரூ.4 கோடி லஞ்சமாக வாங்கியுள்ளாா். அந்தப் பணம், வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றிவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

