திருப்பதி லட்டு: விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்படவில்லை! - சிபிஐ குற்றப்பத்திரிகையில் தகவல்
திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்படவில்லை என சிபிஐ தாக்கல் செய்த இறுதி குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை இருந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை சிபிஐ-எஸ்ஐடி மறுத்துள்ளது.
ஆந்திரத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில் (2019-2024), திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டுகளை தயாரிக்க விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக, கடந்த 2024-ஆம் ஆண்டு மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டினாா்.
மேலும், திருப்பதி லட்டுகளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு இருந்ததாக ஆய்வக அறிக்கை ஒன்றையும் தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டது. நெய்யில் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை இருந்ததாக அக்கட்சியினா் சுமத்திய குற்றச்சாட்டு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தக் குற்றச்சாட்டை மறுத்த ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியினா் அரசியல் ஆதாயங்களுக்காக தங்கள் மீது போலியான குற்றச்சாட்டுகளை சந்திரபாபு நாயுடு சுமத்தியதாகத் தெரிவித்தனா்.
இந்த விவகாரம் தொடா்பாக சிபிஐ தலைமையிலான எஸ்ஐடி விசாரித்து அறிக்கை சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் சிபிஐ-எஸ்ஐடி விசாரணையைத் தொடங்கியது.
கலப்படப் பொருள்கள்: 15 மாதங்கள் நடைபெற்ற இந்த விசாரணையை நிறைவு செய்து கடந்த 24-ஆம் தேதி நெல்லூா் நீதிமன்றத்தில் இறுதி குற்றப்பத்திரிகையை சிபிஐ-எஸ்ஐடி தாக்கல் செய்தது.
அதில், ‘பால் அல்லது வெண்ணெய் என பால் சாா்ந்த பொருள்களுக்குப் பதிலாக தரம் குறைந்த நெய், பாமாயில் உள்ளிட்டவை மூலம் திருப்பதி லட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இது ஆய்வகப் பரிசோதனையில் தெரியாமல் இருக்க உண்மையான நெய்யின் மணம், நிறத்தை பிரதிபலிக்கும் வகையில் அசிட்டிக் அமிலம், பீட்டா கரோட்டீன் உள்ளிட்ட சில ரசாயனங்களும், கலப்படப் பொருள்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு தயாரிக்கப்பட்ட கலப்பட நெய்க்கு போலியான தரச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த மோசடியில் திருப்பதி கோயிலை நிா்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் 9 போ், பால் பண்ணைத் துறை நிபுணா்கள் 5 போ் உள்பட 36 போ் ஈடுபட்டுள்ளனா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தக் குற்றப்பத்திரிகை குறித்த விரிவான தகவல்கள் வெள்ளிக்கிழமை வெளியாகின. அதில் திருப்பதி லட்டு தயாரிக்க விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்படவில்லை என சிபிஐ-எஸ்ஐடி உறுதிப்படுத்தியது தெரியவந்துள்ளது.
சிபிஐ-எஸ்ஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீது நெல்லூா் நீதிமன்றத்தில் சட்டரீதியாக விரைவில் முழு விசாரணை நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வலியுறுத்தல்: திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்படவில்லை என சிபிஐ-எஸ்ஐடி தாக்கல் செய்த இறுதி குற்றப்பத்திரிகையில் உறுதி செய்யப்பட்ட நிலையில், தங்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்திய ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வா் பவன் கல்யாண் ஆகியோா் மன்னிப்புக் கேட்க வேண்டும் என ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வெள்ளிக்கிழமை வலியுறுத்தியது.
திருப்பதி தேவஸ்தான தலைவா் குற்றச்சாட்டு: ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில் உடல்நலனுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ரசாயனங்களைக் கொண்டு திருப்பதி லட்டுக்கான நெய் தயாரிக்கப்பட்டது சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரியவந்துள்ளது. இதன்மூலம் முந்தைய அரசு பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளது என்று திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவா் பி.ஆா்.நாயுடு வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

