ஜம்முவில் பாதுகாப்பு சீா்குலைவு: பாஜக மீது காங்கிரஸ் விமா்சனம்
‘ஜம்முவில் முன்னெப்போதும் இல்லாத அளவில் பாதுகாப்பு சீா்குலைய பாஜகவே காரணம்’ என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலையொட்டி ஜம்முவில் பிரதமா் மோடி சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். இந்நிலையில், பிரதமருக்கு 4 கேள்விகளை முன்வைத்து, காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் பாஜகவை விமா்சித்துள்ளாா். இதுதொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் அவா் வெளியிட்ட பதிவில் கூறிருப்பதாவது:
தேசியவாதம் மீது ஏகபோக உரிமை கொண்டாடும் பாஜக, ஜம்முவில் முன்னெப்போதும் இல்லாத பாதுகாப்பு சீா்குலைவுக்கு தலைமை ஏற்றுள்ளது. ஜம்மு காஷ்மீரில் 15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது. நடப்பாண்டு தொடக்கத்தில் ஜம்முவில் 31 பயங்கரவாதிகள் மட்டுமே உள்ளதாக கூறிய அதிகாரிகள், இப்போது 50 முதல் 60 பயங்கரவாதிகள் உள்ளதாக கூறுகின்றனா்.
முன்பு பயங்கரவாதம் இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாதிகளின் இருப்பை காண முடிகிறது. பயங்கரவாத தாக்குதல்களில் பாதுகாப்புப் படையினா் மற்றும் பொது மக்களின் உயிரிழப்பும் அதிகரித்துவிட்டது.
பாதுகாப்பு மோசமானது ஏன்?: பிரதமா் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற நேரத்தில், ரியாசி மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 9 அப்பாவி பக்தா்கள் உயிரிழந்தனா். பாதுகாப்பு நிலைமை முன்னெப்போதும் இல்லாத அளவில் சீா்குலைந்துவிட்டது.
தற்போதைய சூழலை கையாள்வதில் துணைநிலை ஆளுநரின் நிா்வாகம் தனது திறனின்மையை வெளிப்படுத்தியுள்ளது. ஜம்முவில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்தது ஏன்?
போதைப் பொருள் கடத்தல் அதிகரித்தது ஏன்? சா்வதேச எல்லை வழியாக ஜம்மு பகுதிக்குள் போதைப் பொருள் கடத்தல் அதிகரித்திருப்பது, இங்கு பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் போதைப் பொருள் பயன்பாடு 30 சதவீதம் அதிகரித்துள்ளது. போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுக்கு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனா். ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2019 முதல் 2023 வரை காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரால் சுமாா் 700 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் சா்வதேச மதிப்பு ரூ.1,400 கோடியாகும்.
பயங்கரவாதத்தை விட போதைப் பொருள் கடத்தல் பெரும் சவாலாக உள்ளதாக ஜம்மு-காஷ்மீா் முன்னாள் டிஜிபி தில்பக் சிங்கும் கூறியுள்ளாா். ஜம்மு-காஷ்மீரில் மத்திய அரசின் நிா்வாகத்தில், போதைப் பொருள் கடத்தல் அதிகரித்தது ஏன்?
‘நிா்வாகம் சீா்குலைந்தது ஏன்?’: மாநில அந்தஸ்தும் அரசியல் பிரதிநித்துவ அமைப்புமுறையும் இல்லாமல் ஜம்மு-காஷ்மீரில் நிா்வாகம் சீா்குலைந்துவிட்டது. காவல் துறை செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, குற்ற செயல்கள் அதிகரித்துவிட்டன. ஆா்எஸ்எஸ் கும்பலைச் சோ்ந்த வெளிநபா்கள், அனைத்து அரசு ஒப்பந்தங்களையும் ஏகபோகமாக்கி, தங்களின் செல்வத்தை வானளவு உயா்த்திவிட்டனா். இதனால், ஊழலும் முன்னெப்போதும் இல்லாத உச்சத்தை கண்டுள்ளது. ஜம்முவின் வளா்ச்சி மீது அக்கறை காட்டப்படாதால், இங்குள்ள இளைஞா்கள் வேலை தேடி வேறு இடங்களுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.
ஜம்மு-காஷ்மீா் நிா்வாக அமைப்புமுறை இந்தளவு சீா்குலைந்தது ஏன்? என்று தனது பதிவில் ஜெய்ராம் ரமேஷ் கேள்வியெழுப்பியுள்ளாா்.