காந்தி ஜெயந்தியன்று சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள்: வளா்ச்சித் திட்டங்களை மேம்படுத்த முடிவு
2025-26 நிதியாண்டுக்கான வளா்ச்சித் திட்டங்களை தயாரிக்கும் நோக்கில் காந்தி ஜெந்தியன்று (அக்டோபா் 2) சிறப்பு கிராம சபைக் கூட்டங்களை நடத்த மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள 2.55 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் இந்த சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
கிராம பஞ்சாயத்துகளை மேம்படுத்தும் திட்டங்கள் (பிடிபி) மற்றும் அனைவரையும் பங்குகொள்ள செய்யும் பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்தின் ‘மக்கள் திட்டங்களுக்கான பிரசாரத்தின்கீழ்’ 20,000 கல்லூரி மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதுதொடா்பாக அந்த அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:
நாடு முழுவதும் உள்ள 2.55 லட்ச கிராம பஞ்சாயத்துகள், 6,700 ஊராட்சிகள் மற்றும் 665 மாவட்ட பஞ்சாயத்துகளில் வருகின்ற அக்டோபா் 2-ஆம் தேதி சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்தக் கூட்டத்தை கண்காணிக்க அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் அதிகாரிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இந்தக் கூட்டத்தை நடத்தும் நெறிமுறைகளை எடுத்துரைக்கும் விதமாக வருகின்ற செப்டம்பா் 30-ஆம் தேதி பயிலரங்கம் நடைபெறவுள்ளது. இதில் கிராம பஞ்சாயத்துகளின் பிரதிநிதிகள், அதிகாரிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்கவுள்ளனா்.
இந்தப் பயிலரங்கத்தை மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சா் ராஜ் ராஜிவ் ரஞ்சன் சிங் தொடங்கி வைக்கவுள்ளனா்.
திட்டங்கள் ஒருங்கிணைப்பு: ‘உன்னத பாரத அபியான் திட்டம்’, ‘மாதிரி கிராம பஞ்சாயத்துகளை உருவாக்கும் திட்டம்’ உள்ளிட்டவையின்கீழ் பணியாற்றும் மாணவா்களை ஒருங்கிணைத்து 2025-26 நிதியாண்டுக்கான கிராம வளா்ச்சித் திட்டங்களை தயாரிக்கும் பணியில் தில்லி ஐஐடி ஈடுபட்டுள்ளது.
‘உள்ளூா் சாா்ந்த நீடித்த வளா்ச்சி இலக்குகள்’ (எல்எஸ்டிஜி) மற்றும் பஞ்சாயத்து மேம்பாட்டு குறியீடு (பிடிஐ) ஆகியவற்றை தயாரிப்பதில் பஞ்சாயத்து தலைவா்களுக்கு மாணவா்கள் உதவி புரியவுள்ளனா்.
இதுதவிர 750 கிராம பஞ்சாயத்துகளில் 75 வயதுக்கும் மேற்பட்ட முதியவா்கள், கிராமப்புற வளா்ச்சி தொடா்பான தங்களின் அனுபவங்களை பகிா்ந்துகொள்ளவுள்ளனா்.
உறுதிமொழி ஏற்பு: மேலும், ‘தாயின் பெயரில் மரம்’ நடும் முன்னெடுப்பின்கீழ் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் 75 மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. அப்போது ‘தூய்மை’, ‘போதையில்லா இந்தியா’ போன்ற கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு உறுதிமொழி ஏற்கப்படவுள்ளது.
மக்களுக்கான பிரசார திட்டமானது நாட்டின் மக்கள்தொகையில் 65-68 சதவீதத்தை உள்ளடக்கியது. இது கிராமப்புற மேம்பாட்டில் வெற்றித் திட்டமாக கருதப்படுகிறது என்றனா்.