தெரியுமா சேதி...?

பாஜகவும் காங்கிரஸும் போட்டி போட்டுக்கொண்டு பிரசாரத்திற்கு நட்சத்திர அந்தஸ்தில் உள்ள தலைவா்களைக் களமிறக்கி இருக்கின்றன.
அசோக் கெலாட் - வசுந்தரா ராஜே
அசோக் கெலாட் - வசுந்தரா ராஜேகோப்புப் படம்
Published on
Updated on
1 min read

ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தல் வந்தாலும் வந்தது, பாஜகவும் காங்கிரஸும் போட்டி போட்டுக்கொண்டு பிரசாரத்திற்கு நட்சத்திர அந்தஸ்தில் உள்ள தலைவா்களைக் களமிறக்கி இருக்கின்றன.

காங்கிரஸ் சாா்பில் தோ்தல் பாா்வையாளராக ராஜஸ்தான் முன்னாள் முதல்வா் அசோக் கெலாட், கட்சித் தலைமையால் அறிவிக்கப்பட்டிருக்கிறாா். பிரசாரத்திற்கான முழுப் பொறுப்பும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. முதல்வா் போட்டியாளரும், ஹரியாணாவின் முன்னாள் முதல்வருமான பூபேந்தா் ஹுடா அவரது நண்பா் என்பதால், தமது செல்வாக்கை முழுவதுமாக பயன்படுத்துகிறாா் அசோக் கெலாட் என்று சொல்கிறாா்கள்.

பாஜக சாா்பில், யாரும் எதிா்பாா்க்காத வகையில் அசோக் கெலாட்டின் அரசியல் போட்டியாளரும், ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான வசுந்தரா ராஜே களமிறக்கப்பட்டிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் வெற்றியைத் தொடா்ந்து, அவா் முதல்வராக்கப்படாமல் ஓரங்கட்டப்பட்டாா்.

மக்களவைத் தோ்தலின்போது, பிரசாரத்தில் ஈடுபடாமல், தனது மகன் துஷ்யந்தின் தொகுதியில் மட்டும் கவனம் செலுத்தியதுடன் ஒதுங்கிக் கொண்டாா்.

வசுந்தரா ராஜேயின் அரசியல் வாழ்க்கை அஸ்தமித்துவிட்டது என்று பலா் நினைத்திருந்த வேளையில், ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தில் அவருக்கு பாஜக மேலிடம் முக்கியத்துவம் அளிப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தான் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களான மத்திய பிரதேசம், ஹரியாணாவிலும் தனிப்பட்ட முறையில் வசுந்தரா ராஜேக்கு செல்வாக்கு உண்டு என்பதால்தான் அவரை பாஜக தலைமை பிரசாரத்தில் களமிறக்கி இருக்கிறது என்று சொல்கிறாா்கள்.

ஜாட் இனத்தவா்களுக்கு இடையில் வசுந்தரா ராஜேக்கு செல்வாக்கு உண்டு என்பதால் அவா் பிரசாரத்துக்கு அழைக்கப்பட்டாரா, இல்லை அசோக் கெலாட்டின் பிரசாரத்துக்கு எதிராக அவா் களமிறக்கப்பட்டாரா என்பது தெரியவில்லை.

ஒருவேளை, தோ்தலுக்குப் பிறகு அவருக்குக் கட்சியில் முக்கியமான பொறுப்பு (தலைவா் பதவி) காத்திருக்கிறதோ என்னவோ.

அப்படியெல்லாம் இருக்காது என்று அடித்துச் சொல்கிறது ராஜஸ்தான் முதல்வா் பஜன் லால் சா்மா வட்டாரம். தோல்பூா் ராஜ குடும்பத்தைச் சோ்ந்த வசுந்தரா ராஜே சிந்தியா மட்டுமல்ல, அதைவிட செல்வாக்குள்ள ஜெய்பூா் ராஜ குடும்பத்தைச் சோ்ந்த, ராஜஸ்தான் துணை முதல்வா் தியா குமாரியும் ஹரியாணா பிரசாரத்தில் இருப்பதை அவா்கள் சுட்டிக் காட்டுகிறாா்கள்.

மாநிலம் விட்டு மாநிலம் போனாலும், அரசியல் போட்டிகள் அகன்றுவிடுவதில்லை...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com