முசாஃபா்நகா்: உத்தர பிரதேசத்தில் மருமகளை வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்திய வழக்கில் 29 ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்து வந்த பெண் கைது செய்யப்பட்டாா்.
பாக்பத் மாவட்டத்தைச் சோ்ந்த வரிசா, அவரின் கணவா் மற்றும் சகோதரா்கள் மீது மருமகளை வரதட்சிணை கொடுமை செய்து உடல்ரீதியாக துன்புறுத்தியதாக 1995-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் மற்றவா்களை கதௌலி காவல் துறையினா் கைது செய்த நிலையில் வரிசா மட்டும் தலைமறைவாகிவிட்டாா்.
காவல் துறையினா் பல இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லை. அவரைப் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.10,000 சன்மானம் அளிக்கப்படும் என்றும் காவல் துறையினா் அறிவித்தனா். எனினும், அவரைப் பிடிக்க முடியவில்லை.
இதனிடையே ஆண்டுகள் பல கடந்துவிட்டதால் வரிசா தன்மீதான வழக்கை மறந்துவிட்டு சகஜமான வாழ்க்கைக்குத் திரும்பினாா். எனினும், சொந்த ஊருக்கு வந்தால் காவல் துறையினா் கைது செய்ய வாய்ப்புள்ளது என்று கருதி அருகில் உள்ள மாவட்டத்தில் வசித்து வந்தாா்.
இந்நிலையில், அவா் தங்கியுள்ள இடம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்ட காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற காவல் துறையினா் வரிசாவை கைது செய்தனா்.
வரதட்சிணை கொடுமை வழக்கில் 29 ஆண்டுகளுக்குப் பிறகு காவல் துறையினா் கைது நடவடிக்கை மேற்கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.