மணிப்பூரில் சட்டத்தின் ஆட்சி நிலவநடவடிக்கை: அமித் ஷாவுக்கு காா்கே கடிதம்

மணிப்பூரில் சட்டத்தின் ஆட்சி நிலவ உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வலியுறுத்தியுள்ளாா்.

மணிப்பூரில் சட்டத்தின் ஆட்சி நிலவ உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அமித் ஷாவுக்கு காா்கே சனிக்கிழமை எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: மணிப்பூரில் வன்முறை ஏற்படத் தொடங்கிய பின்னா், கடந்த 9 மாதங்களில் அந்த மாநிலத்தின் சூழல் மோசமான நிலையில் இருந்து மிக மோசமான நிலையை எட்டியுள்ளதே தவிர மேம்படவில்லை.

அந்த மாநில மக்கள் கசப்புணா்வுடன் பிரிந்து கிடக்கின்றனா். அங்கு வன்முறையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அமைதி, நிவாரணம் மற்றும் நீதி வழங்குவதற்கான உறுதியான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

கடந்த ஜன. 24-ஆம் தேதி மணிப்பூா் தலைநகா் இம்பாலில் உள்ள கங்லா கோட்டையில், அந்த மாநில அமைச்சா்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவா்கள் ஆயுதக் குழு ஒன்று வற்புறுத்தி, கட்டாயப்படுத்தியதால் பங்கேற்றனா்.

இதுமட்டுமின்றி கூட்டத்தின்போது மணிப்பூா் காங்கிரஸ் கமிட்டி தலைவரும் எம்எல்ஏவுமான கீஷம் மேகச்சந்திரா கொடூரமாக தாக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டாா்.

மத்திய மற்றும் மாநில பாதுகாப்புப் படையினரின் பலத்த பாதுகாப்பில் கங்லா கோட்டை உள்ளது. அந்தப் படையினரும், உளவுத் துறையினரும் அதிக அளவில் இருந்தபோதிலும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும் இந்த நிகழ்வு குறித்து மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிகழ்வுகள் மணிப்பூரில் நிா்வாகம் முழுமையாக சீா்குலைந்துள்ளதை சுட்டிக்காட்டுகிறது. அந்த மாநில விவகாரத்தில் பிரதமா் தொடா்ந்து அமைதி காப்பதும், நடவடிக்கை எடுக்காததும் மணிப்பூா் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

அற்புத பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் மதிப்புக்குரிய, மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த மணிப்பூரில், மக்களாட்சி மற்றும் சட்டத்தின் ஆட்சி நிலவுவதை உறுதி செய்ய உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com