/

இதற்காக சிறைக்குச் செல்லவும் தயார்: மமதா பானர்ஜி பேச்சு!

இவ்வாறு பேசுவதால் தன்னை சிறையில் அடைத்தாலும் பரவாயில்லை என மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி பேச்சு.

News image
மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி
Updated On :7 ஏப்ரல் 2025, 10:26 am

DIN

வேலையிழந்த ஆசிரியர்களுக்கு ஆதரவாகப் பேசுவதால், தன்னை சிறையில் அடைத்தாலும் பரவாயில்லை என மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.

மேற்கு வங்​கத்​தில் கடந்த 2016 ஆம் ஆண்டு 25,000 ஆசிரியர்​களை நியமனம் செய்​த​தில் முறை​கேடு​கள் நடந்ததாக எழுந்த புகாரில் 25,000 ஆசிரியர்களின் பணி நியமனத்தைத் ரத்து செய்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது.

பணியிடங்களுக்கு அதிகமாக நியமனங்கள், வெற்று ஓஎம்ஆர் ஷீட்டுக்கு மதிப்பெண்கள் அளித்து பணி நியமனம் என முறைகேடு நடந்தது தெரிய வந்துள்ளது.

இதனை எதிர்த்து மேற்கு வங்க அரசு மேல்முறையீடு செய்த நிலையில், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 3 அன்று உறுதி செய்துள்ளது.

இதற்கு எதிராக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேற்கு வங்க திரிணமூல் காங்கிரஸ் அரசு ஊழலில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். முதல்வர் மமதா பானர்ஜி தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பாஜக, காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த தீர்ப்பை ஏற்க முடியாது என்றும் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்பதாகவும் முதல்வர் மமதா பானர்ஜி கூறினார். மேலும் அவர் கூறியபடி கொல்கத்தாவின் நேதாஜி ஸ்டேடியத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மத்தியில் இன்று பேசினார்.

"நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொண்டோம் என்று நினைத்துவிடாதீர்கள். எங்களுக்கு கல் மனம் இல்லை. பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுடன் அரசு துணை நிற்கும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் பேசுவதால் என்னை கைது செய்து சிறையில் அடைத்தாலும் பரவாயில்லை.

தகுதியுள்ளவர்கள் வேலையில்லாமல் இருக்கக் கூடாது அவர்களது பணியில் இடைவெளி விழக் கூடாது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு நியாயமற்றது.

இந்த விவகாரத்தில் எந்த சம்பந்தமும் இல்லாத என்னை இணைத்துப் பேசுகின்றனர். எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று பேசினார்.

இந்த விவகாரத்தில் முதல்வர் மமதா பானர்ஜி மற்றும் அவரது ஆட்சிக்கு எதிராக பாஜகவினர் இன்று பேரணி நடத்துவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.