வளர்ச்சித் திட்டங்கள் மறுஆய்வு: ஜம்மு-காஷ்மீரில் அமித் ஷா தலைமையில் முக்கிய கூட்டம்!

ஜம்மு-காஷ்மீரில் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அமித் ஷா தலைமையில் உயர்நிலைக் கூட்டம் தொடங்கியது.
அமித் ஷா
அமித் ஷா
Published on
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்களை மறுஆய்வு செய்வதற்கான உயர்நிலைக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தொடங்கியது.

ஆளுநர் மாளிகையில் நடைபெறும் கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முதல்வர் உமர் அப்துல்லா, மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் காஷ்மீர் அரசின் மூத்த அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள்.

இந்த கூட்டத்தில், யூனியன் பிரதேசத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து உள்துறை அமைச்சரிடம் அதிகாரிகள் விளக்குவார்கள்.

ஜம்மு காஷ்மீருக்கு மூன்று நாள் பயணமாகச் சென்றுள்ள அமித் ஷா, திங்கள்கிழமை மாலை பள்ளத்தாக்குக்கு வந்தடைந்தார். கடந்த 2023ல் பயங்கரவாதிகளுடன் போரிட்டு உயிர் தியாகம் செய்த கீர்த்தி சக்ரா விருது பெற்ற துணை காவல் கண்காணிப்பாளர் ஹுமாயூன் முசம்மில் பட்டின் வீட்டிற்கு அமித் ஷா சென்றார். கொல்லப்பட்ட காவல் அதிகாரியின் தந்தை, ஓய்வுபெற்ற காவல் துறைத் தலைவர் குலாம் ஹசன் பட்டுடன் அவர் கலந்துரையாடினார். பின்னர் ஆளுநர் மாளிகைக்குச் சென்றார்.

கீர்த்தி சக்ரா விருது பெற்ற பட், செப்டம்பர் 2023இல் தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் என்ற கடூல் கிராமத்தைச் சுற்றியுள்ள அடர்ந்த வளத்தில் பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு வீரமரணம் அடைந்த நான்கு பாதுகாப்புப் படையினரில் ஒருவர் ஆவார்.

மேலும் இன்று நடைபெறும் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் காஷ்மீரின் பாதுகாப்பு நிலைமையை உயர் பாதுகாப்புப் படையினர், காவல்துறை அதிகாரிகளுடனான சந்திப்பில் மறு ஆய்வு செய்ய உள்ளார். அமித் ஷாவின் வருகைக்காகக் காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, ஏராளமான ஆயுதமேந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com