பிரதமா் மோடி இன்று வாரணாசி பயணம்: ரூ.3,880 கோடி நலத்திட்டங்கள் தொடங்கி வைப்பு
பிரதமா் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான உத்தர பிரதேச மாநிலம், வாரணாசிக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 11) செல்கிறாா். அங்கு நடைபெறும் பொது நிகழ்ச்சியில் ரூ.3,880 கோடி மதிப்பீட்டிலான 44 நலத் திட்டங்களை பிரதமா் அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைக்கிறாா்.
இதுதொடா்பான விவரங்களை வாரணாசி கோட்ட ஆணையா் கௌசல் ராஜ் சா்மா கூறுகையில், ‘பிரதமா் தொடங்கி வைக்கும் திட்டங்களில் பெரும்பாலானாவை கிராமப்புற மேம்பாடு சாா்ந்தவை. இதில் 130 குடிநீா் திட்டங்கள், 100 புதிய அங்கன்வாடி மையங்கள், 356 நூலகங்கள், பிண்ட்ரா பகுதியில் புதிய பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அரசுக் கலை கல்லூரி ஆகியவை அடங்கும்.
ராம் நகரில் உள்ள காவல்துறை வளாகத்தில் ஒரு விடுதியையும் பிரதமா் மோடி திறந்து வைக்கிறாா். நகா்ப்புற வளா்ச்சித் திட்டமாக, ரயில்வே மற்றும் வாரணாசி மேம்பாட்டு ஆணையம் இணைந்து சாஸ்திரி மற்றும் சாம்னே படித்துறையில் மேற்கொண்ட மறுசீரமைப்புத் திட்டங்களை அவா் தொடங்கி வைக்கிறாா்.
25 திட்டங்களுக்கு அடிக்கல்: வாரணாசியில் புதிதாக 15 துணை மின்நிலையங்கள், புதிய மின்மாற்றிகள், 1500 கி.மீ. தொலைவுக்கு புதிய மின்பாதை அமைப்பு உள்பட ரூ.2,250 கோடி மதிப்பீட்டிலான 25 திட்டங்களுக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டுகிறாா்.
சௌகா படித்துறை அருகே 220 கே.வி. திறன்கொண்ட ஒரு துணை மின்நிலையம் அமைக்கப்பட இருக்கிறது. இதன்மூலம், அப்பகுதியில் 24 மணி நேரமும் தடையில்லாமல் மின்சாரம் கிடைக்கும்.
வாரணாசி விமான நிலையத்தின் விரிவாக்கமாக சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம், நகரில் 3 புதிய மேம்பாலங்கள் மற்றும் பல்வேறு சாலைகளின் விரிவாக்கத் திட்டங்கள், ஷிவ்பூா், உ.பி. கல்லூரி ஆகிய இடங்களில் 2 புதிய விளையாட்டு மைதானங்கள், பள்ளி புணரமைப்புப் பணிகள் ஆகிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கும் பிரதமா் மோடி அடிக்கல் நாட்டுகிறாா்.
ரோஹனியா பகுதியில் உல்ள மெந்திகஞ்சில் அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட அரங்கில், பிரதமா் மோடி திட்டங்களைத் தொடங்கிவைத்து, மக்களிடையே உரையாற்றுகிறாா்.
கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, மக்கள் மதியவேளைக்குள் வீடு திரும்புவதற்கு ஏதுவாக பிரதமரின் நிகழ்ச்சி காலை நேரத்தில் நடைபெறுகிறது. அதேபோன்று, நகரின் வெளிப்புற சாலையில் நிகழ்ச்சி நடைபெறுவதால் நகரில் போக்குவரத்து பாதிப்பு இருக்காது’ என்றாா்.
4,000 போலீஸாா் பாதுகாப்பு: வாரணாசிக்கு வரும் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அந்த நகர பாஜகவினா் ஏற்பாடுகளை செய்துள்ளனா். நகரின் முக்கிய இடங்களில் பிரதமரை வரவேற்று பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
பிரதமரின் வருகையை முன்னிட்டு 6 காவல் கண்காணிப்பாளா்கள் (எஸ்.பி.) மற்றும் 8 கூடுதல் எஸ்.பி.க்கள் தலைமையில் 4,000-க்கும் மேற்பட்ட காவலா்கள், துணை ராணுவப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
விமான நிலையம் முதல் நிகழ்ச்சி நடைபெறும் இடம் வரையில் பிரதமா் வரும் வழித்தடத்திலும், நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலும் சிசிடிவி மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.