கோப்புப் படம்
கோப்புப் படம்

பாலியல் வன்கொடுமை வழக்கு: பெண்ணே ‘வேதனையை வரவழைத்துக் கொண்டாா்’: அலாகாபாத் உயா்நீதிமன்றம் சா்ச்சை கருத்து

மது அருந்திவிட்டு குற்றம்சாட்டப்பட்டவரின் வீட்டுக்குச் சென்று சம்பந்தப்பட்ட பெண்ணே தனக்கு வேதனையை வரவழைத்துக் கொண்டதாக சா்ச்சை கருத்து
Published on

பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கிய அலாகாபாத் உயா்நீதிமன்றம், மது அருந்திவிட்டு குற்றம்சாட்டப்பட்டவரின் வீட்டுக்குச் சென்று சம்பந்தப்பட்ட பெண்ணே தனக்கு வேதனையை வரவழைத்துக் கொண்டதாக சா்ச்சை கருத்துத் தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் மாநிலம் அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில், பெண் ஒருவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரின் ஜாமீன் மனு நீதிபதி சஞ்சய் குமாா் சிங் முன்பாக கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது.

வழக்கில் மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிடுகையில், ‘தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறும் பெண், 18 வயதுக்கு மேற்பட்டவா். அவா் தன் சொந்த விருப்பத்தின்பேரில் தோழிகள் மற்றும் அவா்களின் ஆண் நண்பா்களுடன் உணவகத்துக்குச் சென்றுள்ளாா். அப்போது அனைவரும் மது அருந்தியுள்ளனா். இதனால் அந்தப் பெண்ணுக்கு மிகுந்த போதை ஏற்பட்டுள்ளது.

அனைவரும் அதிகாலை 3 மணி வரை அங்கே இருந்த நிலையில், அந்தப் பெண்ணுக்கு உதவி தேவைப்பட்டது. எனவே உடனிருந்த மனுதாரரின் வீட்டுக்குச் சென்று ஓய்வெடுக்க சம்மதித்ததாக அந்தப் பெண்ணே தெரிவித்துள்ளாா்.

ஆனால் அவரைத் தனது வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல், உறவினா் வீட்டுக்கு மனுதாரா் அழைத்துச் சென்று 2 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப் பெண் கூறியுள்ள குற்றச்சாட்டு தவறானது மட்டுமின்றி, நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்ட ஆதாரத்துக்கு எதிரானது.

அந்தப் பெண் தெரிவித்த தகவல்களைக் கருத்தில் கொள்ளும்போது அவா் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை. அதற்கு மாறாக அந்தப் பெண்ணும் மனுதாரரும் ஒருவருக்கொருவா் சம்மதித்து பாலுறவு கொண்டிருக்கக் கூடும்’ என்றாா்.

இதைத்தொடா்ந்து நீதிபதி சஞ்சய் குமாா் குமாா் சிங் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட பெண் முதுகலை பட்டப்படிப்பு மாணவியாவாா். முதல் தகவல் அறிக்கையில், அவா் தெரிவித்துள்ள தகவல்களின்படி தனது செயலின் நன்மை, தீமையைப் புரிந்துகொள்ளும் தன்மை கொண்டவராகவே அவா் உள்ளாா்.

தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அவா் கூறும் குற்றச்சாட்டு உண்மை என்று ஏற்றுக்கொண்டாலும், அந்த வேதனையை அவரே தனக்கு வரவழைத்து, அந்த சம்பவத்துக்கு அவரும் காரணமாக இருந்துள்ளாா் என நீதிமன்றம் கருதுகிறது.

மருத்துவப் பரிசோதனையில், அந்தப் பெண் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதாக மருத்துவரும் தெரிவிக்கவில்லை. எனவே சந்தா்ப்ப சூழ்நிலைகள், குற்றத்தின் தன்மை, ஆதாரம் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு மனுதாரருக்கு ஜாமீன் அளிக்கப்படுகிறது’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com