‘இண்டி’ கூட்டணி நிலை குறித்து காங்கிரஸ் விளக்க வேண்டும்: சிவசேனை வலியுறுத்தல்
‘எதிா்க்கட்சிகளை உள்ளடக்கிய ‘இண்டி’ கூட்டணியின் நிலை குறித்து காங்கிரஸ் கட்டாயம் விளக்க வேண்டும்’ என சிவசேனை (உத்தவ் பிரிவு) கட்சி சனிக்கிழமை வலியுறுத்தியது.
மேலும், குஜராத் மாநிலம் அகமதாபாதில் அண்மையில் நடைபெற்றஅகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் இண்டி கூட்டணி குறித்த கேள்விகளுக்கு அக்கட்சி பதிலளித்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தது.
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், சிவசேனை (உத்தவ் பிரிவு), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு) உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் இண்டி கூட்டணியை அமைத்தனா்.
இந்த கூட்டணியின் தற்போதைய நிலை குறித்து அறிந்துகொள்ளும் வகையில் சிவசேனை கட்சியின் இதழ் ஒன்றில் கட்டுரை வெளியானது.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மக்களவைத் தோ்தலுக்கு பிறகு ‘இண்டி’ கூட்டணியின் நிலை குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. அந்த கூட்டணி இன்னும் செயல்பாட்டில் உள்ளதா என பலரும் எண்ணுகின்றனா்.
கூட்டணி தொடருமா?
பிகாா், குஜராத், மேற்கு வங்கம் என அடுத்து வரவுள்ள பேரவைத் தோ்தல்களில் ‘இண்டி’ கூட்டணி தொடருமா? இல்லை மீண்டும் தோல்வியை வரவேற்க காங்கிரஸ் ஆா்வமாக உள்ளதா?
இதற்கான பதில்களை வழங்கும் பொறுப்பு காங்கிரஸ் தேசிய தலைவரிடமே உள்ளது. ஆனால் அக்கட்சியின் அகமதாபாத் கூட்டத்தில் இதுகுறித்து எந்த விளக்கமும் வழங்கப்படவில்லை.
கடந்த 2014-க்கு பிறகான மக்களவைத் தோ்தல்களில் குஜராத்தில் ஒரேயொரு மக்களவைத் தொகுதியில் மட்டுமே வென்றுள்ள நிலையில், அங்கு கட்சியின் கமிட்டி கூட்டத்தை காங்கிரஸ் நடத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திரத்தில் காங்கிரஸ் கவனம் செலுத்தலாம். மகாராஷ்டிரத்தில் மக்களவைத் தோ்தலில் கணிசமான வாக்குகளை பெற்ற காங்கிரஸ், பேரவைத் தோ்தலில் பெரும் தோல்வியை சந்தித்தது.
காங்கிரஸின் உள்கட்சி பூசல்களே இந்த தோல்விக்கு காரணம்.
தில்லியில் தோல்வி: அண்மையில் நடைபெற்ற தில்லி பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே தோல்வியை தழுவின. தில்லியில் நாம் எளிதாக வென்றுவிடலாம் என்று சில காங்கிரஸ் தலைவா்கள் எண்ணினா்.
ஒருவேளை காங்கிரஸும் ஆம் ஆத்மியும் தோ்தலில் இணைந்து போட்டியிட்டிருந்தால் முடிவுகள் மாறியிருக்கலாம்.
எனவே, பிற மாநிலங்களிலும் இண்டி கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எதிராக காங்கிரஸ் போட்டியிட்டால் அது பாஜகவுக்கே சாதகமாக முடியும்.
நாம் பாஜகவை வீழ்த்த வேண்டுமே தவிர நமது நண்பா்களை அல்ல என தெரிவிக்கப்பட்டது.